தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து பல அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டி வருகின்றனர். கடந்த 2 தினத்திற்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து நேற்று மாலை திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தீபாவளி நேரம் என்பதால், தற்காலிக தீபாவளி பட்டாசு கடைகள் அமைப்பதற்காக உரிமம் மற்றும் தடையில்லா சான்று பெறுவதற்காக லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது. அங்கு பெரிதாக எதுவும் சிக்காத நிலையில், பின்னர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் வாகனத்தை சோதனையிட்டனர்.
அப்போது, அந்த வாகனத்தில் இருந்த சீருடையில் ரூ.97 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ஜெகதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிரடி சோதனையில் பணம் கைப்பற்றப்பட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ஜெகதீஷ் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திருச்சி மாவட்டத்தில் தற்போது தீயணைப்புத் துறையில் மாவட்ட அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெகதீஷ். இவர் தூத்துக்குடியில் மாவட்ட அலுவலராக பணிபுரிந்த போது இவரால் வழங்கப்பட்ட தடையின்மை சான்றுக்கு அந்த உரிமையாளரிடமிருந்து பணத்தை வாங்கச் சென்ற ஸ்ரீ வைகுண்டம் நிலைய அலுவலர் ரோலன் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கிக்கொண்டார்.
பாளையங்கோட்டையில் இவர் தீயணைப்பு அலுவலராக பணிபுரிந்த போது இவரால் எழுத்தராக நியமிக்கப்பட்ட பத்பநாதன் என்பவரும் ஒரு பள்ளியில் தடையின்மைச் சான்றுக்கு லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சிக்கிக்கொண்டார். மேலும் கரூரில் பணிபுரிந்த போது பாரத பிரதமருக்கு ஓவர் கோட் செய்து கொடுத்த ஒரு பின்னலாடை நிறுவனத்தில் ரூபாய் 3 லட்சம் ரூபாய் தடையின்மைச் சான்றிதழுக்குப் பேரம் பேசி அங்கு உள்ள மாவட்ட ஆட்சியரால் எச்சரிக்கப்பட்டு பின்பு திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டார்.
அதேபோன்று கோயம்புத்தூரில் மாவட்ட அலுவலராக பணிபுரிந்த போது லஞ்சப் பணம் அதிகம் பெறும் நோக்கத்திற்காகப் பட்டாசு கடைக்காரர்களுக்குத் தற்காலிக பட்டாசு கடை அமைக்க பல விண்ணப்பங்களை நிராகரித்து அதன் பின்பு அதிக லஞ்சத்தொகை பெற்று ஒரே நாளில் சுமார் 250 தடையின்மை சான்றிதழுக்கு கூர்ந்தாய்வு செய்ததாக போலி ஆய்வு அறிக்கை தயார் செய்து அதிக லஞ்சப் பணம் பெற்ற காரணத்தினால் பொது மக்களின் புகாருக்கு ஆளாகி அங்கிருந்து ஊட்டிக்கு மாற்றப்பட்டார்.
இவர் தீயணைப்புத் துறையில் அலுவலராக சேர்ந்து நாளில் இருந்து லஞ்சப் பணத்திற்காக பொதுமக்களையோ அல்லது தொழில் தொடங்கும் உரிமையாளர்களையோ மிரட்டுவது அவமரியாதை செய்வது இவரது வாடிக்கையான ஒன்றாகும். இவர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்த காலங்களில் பள்ளி தடையின்மைச் சான்று வழங்க வேண்டும் எனில் அந்த பள்ளி உரிமையாளர்களிடம் உங்கள் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தைக்கு தங்களால் வசூலிக்கப்படும் அந்த கல்வி கட்டணத்தை மட்டும் எனக்கு செலுத்தினால் போதும் என்று வித்தியாசமான முறையில் லஞ்சத்தை மிரட்டி வாங்குவது இவரது வாடிக்கையான வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தன்னுடைய செயல்பாடுகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக தீயணைப்புத் துறையின் கடைநிலை பணியாளர்களை சிறு தவறுகளுக்கு கூட மிகப் பெரிய அளவில் தண்டனை கொடுப்பது. மது அருந்தும் தீயணைப்பு வீரர்களை திருத்துகிறேன் என்ற போர்வையில் அவர்களின் மனைவிகளுடைய செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு தவறாக பேசுவது. இதெல்லாம் இவரது வாடிக்கையான ஒன்றாகும். இவர் பல இடங்களில் காலி மனைகளாகவும் திருச்சியில் முக்கிய நகரத்தில் விலை மதிப்புள்ள வீடு ஒன்றும், கரூரின் ஒரு முக்கியமான நகைக் கடையில் மாதாமாதம் பெரும் லஞ்சப் பணத்தை கொண்டு தங்கங்களை கட்டிகளாக வாங்கி சேமித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையும் நீண்ட நாட்களாக இவரை கண்காணித்து இந்த சோதனையை நடத்தி உள்ளனர். எனவே இந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் அவர் கையும் களவுமாக சிக்கவில்லை. இதற்கு முன் இவர் பணியாற்றிய இடங்களில் பல தீயணைப்பு அலுவலர்கள் இவரால் லஞ்ச ஒழிப்புதுறையினரால் சிக்கி தங்களுடைய வாழ்க்கையை இழந்துள்ளனர். இப்படி பல ஆண்டுகளாக சிக்காமல் தப்பித்து வந்த அவர் தற்போது சிக்கியுள்ளார். ஆனால் இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து இதுபோன்ற சோதனைகளை நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.