Skip to main content

ஜெயலலிதா பல்கலைக்கழகம் விவகாரம்.. சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகல்..!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

Jayalalithaa University issue Judges withdraw from CV Shanmugam case ..!

 


விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக்கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த, வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் கிருபாகரன் அமர்வு விலகியதால், வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் வரும் திங்கட்கிழமை  விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

 

இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரியும், பதிவாளரை நியமிக்க கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில், டாக்டர்.ஜெயலலிதா பல்கலைகழகத்திற்கான துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் கடந்த அரசால் ஒத்துக்கப்பட்ட போதும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுவதாகவும், இன்னும் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை  இரண்டாக பிரித்து விட்ட நிலையில், எல்லை வரம்பை மீறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது சட்டத்தை மீறிய செயல் எனவும், பல்கலைக்கழகத்தை பிரித்து இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உள்ளதால் அறிவுப்புக்கு தடை விதிக்கவேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

 

இந்த மனு  இன்று நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்ததைடுத்து, வரும் திங்கள்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்