
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினரும், அமமுகவினரும் போட்டிப் போட்டுக்கொண்டுக் கொண்டாடினர்.
நாகை மாவட்டம், அதிமுக கட்சி அலுவலக வாசலில் காவல்துறையின் அனுமதியோ, மற்ற அனுமதியோ இல்லாமல், அதிகாலை 4 மணிக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அதிமுகவினர் திறந்திருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
நாகை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தின் பக்கவாட்டு இடத்தில், திறந்த வெளியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை ஜெயலலிதா பிறந்தநாளில் திறக்க திட்டமிட்டு, சிலைக்கான பீடங்களைக் கட்டி அமைத்துவந்தனர். தலைவர்களின் சிலைகளைத் திறப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற விதி இருக்கிறது. ஆனாலும் அதிமுகவினர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளைத் திறக்க நாகை மாவட்டக் காவல்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறாமலேயே திறந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சிலை திறப்பதால் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை உணர்ந்த அதிமுக நிர்வாகிகள், அவசர அவசரமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் தகவலைக் கூறி, அதிகாலை 4 மணிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படியே முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பவுன்ராஜ் உள்ளிட்டோர் தலைமையில், ஜெயலலிதா பிறந்த தினத்தன்று அதிகாலையில் இருட்டோடு இருட்டாக சிலைகளைத் திறந்தனர். அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலை திறப்பது குறித்து எந்தவித அனுமதியும் கேட்டு மனு அளிக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ‘பலமுறை பல இடங்களில் அனுமதியில்லாமல் திறக்கப்பட்ட சிலைகளை அதிரடியாக அப்புறப்படுத்திய போலீஸார், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? சிலையை அப்புறபடுத்துவார்களா, அல்லது அவசர அவசரமாக ஒரு பொய்யான மனுவைத் தயாரித்து, முன்னாடியே அனுமதி வாங்கிவிட்டார்களே என ஆளுங்கட்சிக்காரர்களைப் போலவே பிரச்சனையை மடைமாற்றிவிடுவார்களா? இனிமேல்தான் புரியும்’ என்கிறார்கள் அரசியல்வாதிகள்.