Skip to main content

ஜெயலலிதா நினைவில்ல உத்தரவை ரத்து செய்யக் கோரிய ஜெ.தீபா வழக்கு தள்ளிவைப்பு!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

chennai high court

 

வேதா நிலையத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கின் விசாரணையை,  7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக ஜெ.தீபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான என்னையும், என் தம்பி ஜெ.தீபக்கையும்,  சட்டப்படியான வாரிசாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 29ஆம் தேதி அறிவித்தது. எனது அத்தை ஜெயலலிதாவும், பாட்டி சந்தியாவும், போயஸ் கார்டனில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வேதா நிலையத்தில் அவர்களின் இறுதிக் காலம் வரை வாழ்ந்தனர்.

 

ஜெயலலிதா பல்வேறு சமயங்களில் வேதா நிலையத்தின் மீதுள்ள பற்று குறித்து உணர்ச்சிபூர்வமாக பேட்டியளித்துள்ளார். பாட்டி சந்தியா இறந்தபிறகு, அவர் எழுதிவைத்த உயிலின்படி அந்தச் சொத்து முழுவதும் ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து, கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார்.

 

இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில், எனது கோரிக்கையைப் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. வேதா நிலையம் 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இந்தச் சொத்தை, எங்களின் விருப்பத்திற்கு மாறாக ஆர்ஜிதம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2018-ஆம் ஆண்டு நவம்பரில், அந்தப் பகுதி மக்களிடம் கருத்து கேட்க சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். அதற்கான நாளும், நேரமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பொது கருத்துக் கேட்பு எதுவும் நடத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கும் சட்டத்திற்கும் முரணாக, போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு ஆர்ஜிதம் செய்துள்ளது.

 

நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு, செட்டில்மெண்ட் உரிமைச் சட்டத்துக்கு முரணாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. சொத்துகள் மீது உரிமையுள்ள நபர்களிடம் எந்தக் கருத்தையும் கேட்கவில்லை. வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவதால் எந்தக் குடும்பமும் பாதிக்காது, மறுவாழ்வு மற்றும் செட்டில்மெண்ட் தேவையில்லை என்று நில ஆர்ஜித அதிகாரி அறிவித்துள்ளார். இந்த நிலையில், சட்டபூர்வ வாரிசுகளான எங்களைக் கேட்காமல், வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையா சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தமிழக அறிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் திணறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற அரசு அவசரம் காட்டுகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. அதிகாரிகள், டாக்டர்கள் என 147 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த நேரத்தில், வழக்கில் சம்மந்தப்பட்ட இடத்தை அரசு தன்வசம் எடுத்துக்கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக அழித்துவிடும். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்திற்கும் நாங்கள்தான் உரிமை கோர முடியும். இவற்றை எல்லாம் தற்காலிகமாக தங்கள் வசம் அரசு எடுத்துக்கொண்டிருப்பது நியாயமற்றது, சட்ட விரோதமானது.

 

வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை,  சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் நில ஆர்ஜித அதிகாரி எடுத்துவிடக்கூடாது எனக் கோரி, தமிழக அரசுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி மனு அனுப்பினேன். இந்நிலையில்,  என்னை ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகியாக நியமனம் செய்தும், 6 மாதங்களுக்குள் ஜெயலலிதாவின் சொத்துகள், அவரது கடன்கள் ஆகியவற்றை கண்டறிந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், போயஸ் கார்டன் வீட்டை ஆய்வு செய்யக்கூட எனக்கு அதிகாரிகள் அனுமதி தரவில்லை. மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை.

 

எனது மூதாதையர்களின் சொத்துகளை, குறிப்பாக நகைகள், உடைகள், பெண்களின் உடமைகளை அரசு எடுப்பது பெண்மையை இழிவுபடுத்தும் செயலாகும். எனது தாய்போல் இருந்த ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. வேதா நிலையத்தில் உள்ள ஏராளமான மதிப்பு மிக்க பொருட்கள், தங்க, வைர, பிளாட்டின, வெள்ளி நகைகள் போன்றவை புராதனமானவை. அவை எனது தாத்தாவிற்கு, மைசூர் ராயல் பேலஸ் டாக்டர் ஒருவரால் வழங்கப்பட்டவை. அவற்றை ஜெயலலிதா மிக பத்திரமாக பராமரித்து வந்தார். அவற்றைத் தொட யாருக்கும் அனுமதி வழங்கமாட்டார். அப்படிப்பட்ட பொருட்களை அரசு கையகப்படுத்துவது, ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஜெயலலிதாவின் உயர் மதிப்புள்ள நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல.

 

http://onelink.to/nknapp

 

ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக வேதா நிலையத்தை மாற்ற, தமிழக மக்கள் விரும்பவில்லை. நாங்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 89 சதவீதம்பேர், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான, சட்டப்பூர்வ வாரிசுகளான நாங்கள் இதற்கு அனுமதிக்க மாட்டோம். எனவே, வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றும் தென் சென்னை வட்டார வருவாய் அதிகாரி, கடந்த ஜூலை 22-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மனு,  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கு  விசாரணை,  வரும் 7 -ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.  

 


 

சார்ந்த செய்திகள்