Skip to main content

ஜெயலலிதா கார் ஓட்டுநர் மர்ம மரணம்; சிபிசிஐடி முக்கிய சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை

Published on 03/09/2023 | Edited on 03/09/2023

 

Jayalalithaa car driver incident mysteriously; CBCID re-examination of key witnesses

 

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் மர்ம மரணம் தொடர்பாக, முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி காவல்துறையினர் செப்.1ம் தேதி விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சமுத்திரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

 

அவர் முதல்வர் பொறுப்பேற்ற இரண்டு மாதத்தில், ஜெ.,வுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு கனகராஜ்தான் மூளையாக செயல்பட்டார் என்று கூறப்பட்டது. அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் 2017 ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி இரவு, ஆத்தூர் அருகே சந்தனகிரி புறவழிச்சாலையில் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

 

இது ஒருபுறம் இருக்க, கனகராஜின் சாவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என அவருடைய அண்ணன் தனபால் புகார் கிளப்பினார். கனகராஜின் செல்போன் தடயங்கள் உள்ளிட்ட மேலும் சில ஆவணங்களை மறைத்ததாக தனபால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளியே இருக்கிறார்.

 

Jayalalithaa car driver incident mysteriously; CBCID re-examination of key witnesses

 

இந்நிலையில், கனகராஜின் மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி புலனாய்வுப்பிரிவு ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான தனிப்படையினர் மீண்டும் சேலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வழக்கு விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகக்  கூறப்படுகிறது. கனகராஜ் இறந்ததாகச் சொல்லப்படும் சந்தனகிரி புறவழிச்சாலை, அவருடைய சொந்த ஊரான சமுத்திரம் ஆகிய இடங்களில் செப். 1ம் தேதி நேரடியாக பார்வையிட்டு விசாரித்தனர்.

 

வழக்கு தொடர்பாக சில முக்கிய சாட்சிகளை, சேலத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அழைத்து வந்தும் விசாரித்தனர். இதனால் கனகராஜின் மர்ம மரண வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்