ஜெ.வுக்காக மாணவர்களுக்கு அலகு குத்தியதாக புகார்: தமிழக அரசுக்கு ம.உ.ஆ. நோட்டீஸ்
ஜெயலலிதா குணமடைய வேண்டி மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக அலகு குத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய வேண்டி தொண்டர்கள் கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்தனர். சிறப்பு வழிபாடு, அலகு குத்துதல் என பல்வேறு வகையில் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
அவ்வகையில் சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி 20 மாணவர்களின் கன்னங்களில் அலகு குத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகார் குறித்து 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.