உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களித்தனர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். கரோனா நோய்த்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவில் வளாகத்திலேயே நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் மத்தியில் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் கள்ளழகர் கோவில் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் தங்கப்பல்லக்கில் கொண்டுவரப்பட்டு இன்று காலை வைகையில் இறங்கினார். அழகர் பச்சை பட்டுடுத்தினால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். அதன்படி பச்சை பட்டுடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனால் பக்தியில் பரவசமானது மதுரை மண்.