சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு இந்த மாதம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகளில் உடல் நல பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 60% குழந்தைகள் இருமல் மற்றும் சளி காரணமாக சிகிச்சைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமாக இருமல், சளி ஆகியவற்றின் தாக்கம் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது டிசம்பர் இரண்டாம் வாரத்திற்கு பிறகு குறையும். ஆனால், இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக அந்த விகிதம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிவை நுரையீரல் பாதிப்பின் முந்தைய கட்டம் என எச்சரித்துள்ள மருத்துவர்கள், குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையே தற்போது குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்றுக்கு காரணம். ஆறு மாதத்திற்கு குறைவாக உள்ள குழந்தைகள் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். தொண்டை வலி, சளி, காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. இது கொரோனா தொற்று அல்ல. ஐந்து வயது முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.