தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வருகின்ற ஜனவரி ஐந்தாம் தேதி புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. கடந்த முறைகள் போலவே கரோனா காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதாக தலைமைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.
அதற்கு முன்பே தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகச் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஆனால் இந்தமுறை தலைமைச் செயலகம் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த ஏற்பாடு நடந்த நிலையில், நேற்று அரசு வெளியிட்ட அறிவிப்புகள் காரணமாக மீண்டும் கலைவாணர் அரங்கிலேயே ஜனவரி 5ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும், ஐந்தாம் தேதி தொடங்கும் இந்த கூட்டத்தொடர் ஒரு வாரம் வரை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 24, 2020 ஆம் ஆண்டு கடைசியாக கரோனா பரவலுக்கும் முன்னதாக தமிழக தலைமைச் செயலக அலுவலகத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த அனைத்து கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கிலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.