Skip to main content

''மனிதனுக்கு மரணமில்லை'' -அதுதான் அவரின் இறுதிப் பேச்சு!!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

 "Man has no death" - that was his final speech !!

 

சுதந்திர போராட்டத்தில் வால் ஏந்தியோ, துப்பாக்கி தூக்கியோ அவர் போராடவில்லை ஆனால் அவரின் கவிதைகள் நெருப்புப் பிழம்பாய் வெள்ளையர்களை எதிர்த்து ஈட்டியாய் குத்தியது. மக்கள் மனங்களில் ஆவேச நெருப்பை வார்த்தது, போர் பரணி மட்டுமல்ல மனித சமூக சமத்துவத்தை, பெண் உரிமையை, சிட்டுக்குருவி, காகம் என உயிரினத்தையும் நேசித்து பாடல்களை வாசித்த அற்புதக் கவி அவர். ஆம்... அவர்தான் மகாகவி என்றும், தேசியகவி எனவும் அழைக்கப்பட்ட பாரதியார்.
 

தமிழ்ச் சமூகத்திற்கே பெருமைமிகு அடையாளமான பாரதியார் இறுதியாகக் கலந்து கொண்ட வெளியூர் பயணம் என்றால் அது தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு தான். ஈரோடு வந்து சென்ற சில நாட்களிலேயே பாரதியார் தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டார். அது நிகழ்ந்து நூறு ஆண்டுகள் என்பதுதான் அவரைப் பற்றியான இந்த நினைவுச் செய்தி.

 

இறவா புகழ் கொண்ட அந்தத் தேசியக்கவி பாரதியார், யானையால் தாக்கப்பட்டு குணமடைந்த பின் வெளியூர் பயணமாக, 1921 ஜூலை, 31இல் ஈரோடு வந்தார்.

இவை குறித்து நெகிழ்ச்சியோடு கூறுகிறார் தொல்லியல் அறிஞர் ஈரோடு புலவர் ராசு அவர்கள்,

"ஈரோடு கருங்கல்பாளையத்தில் அப்போது காங்கிரஸ் பிரமுகராக இருந்த வக்கீல் எம்.கே.தங்கபெருமாள் பிள்ளை ஒரு நூலகத்தைத் தொடங்கியிருந்தார். அது கருங்கல்பாளையம் வாசகசாலை எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதன் ஆண்டு விழாவுக்காகத்தான் பாரதியார் அப்போது அழைக்கப்பட்டார்.

 "Man has no death" - that was his final speech !!


ஜூலை, 31இல் அந்த வாசக சாலையின் ஆண்டு விழாவில், ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில் பாரதியார் பேசினார். அதற்கு அடுத்த நாள் ஆக., 1ஆம் தேதியன்று காரைவாய்க்கால் என்ற பகுதியில் இருந்த மைதானத்தில் சுதேசிகள் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில், ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் பேசினார். இதுவே, பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவாகும். அவர் சென்னை சென்ற பின், சுதேசமித்திரன் நாளிதழில், "சக்திதாசனின் ஈரோடு யாத்திரை "என்ற தலைப்பில், இரண்டு நாட்கள் கட்டுரை எழுதினார்.அது மிகவும் சுவையான கட்டுரையாகும்.

அந்தக் கட்டுரையில் பாரதியார் எழுதுகிறார். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் தன்னை வரவேற்கச் சென்றவர்களுக்கு நான் தான் பாரதியார் என அடையாளம் தெரியவில்லை. ‘நானும் என்னை அறிமுகம் செய்து கொள்ளவில்லை. நானே மாட்டு வண்டி பிடித்து, மூன்று மைல் துாரம் உள்ள கருங்கல்பாளையம் கிராமத்துக்குச் சென்றேன். என்னையும், வண்டிக்கார சிறுவனையும், 2 பெரிய பருவதமாக நினைத்து, பூனைக்குட்டி போன்ற மாட்டுக்கன்று அழைத்துக் கொண்டு சென்றது,’ என ஈரோடு பயணத்தைப் பெருமிதமாக எழுதினார். அதேபோல் தங்கபெருமாள் பிள்ளை வீட்டில் பாரதியார் தங்கி இருந்தார். அப்போது வக்கீலுக்கான கோட்டை எடுத்து, அவரது மனைவிக்கு போட்டுவிட்டு, ‘பெண்கள் முன்னேற வேண்டும்’ என்றார், பாரதி. 


அது போலவே ஒரு இஸ்லாமியர் வீட்டில் பாரதியார் சாப்பிட்டதையும், அவரே முகச்சவரம் செய்ததையும் பார்த்து, ‘ஆச்சாரம் இல்லாத பிராமணன்’ என்று தங்கப் பெருமாள் பிள்ளை மனைவி கூறினாராம். அதையும் புகழ்ந்து கூறியிருக்கிறார். அவரது பெட்டியில் அவர் கவிதைகளை எல்லாம் நீள நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததைக் காட்டி, ‘தீப்பெட்டி போல என் கவிதை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்றாராம். வழிச்செலவுக்கு கூட பணம் வாங்க மறுத்துவிட்டாராம் பாரதியார்.

 

http://onelink.to/nknapp


கடைசிப் பயணமாக, ஈரோடு வந்த பாரதியாரின் நுாற்றாண்டு நினைவை, ஈரோடு மக்கள் நினைவு கூற வேண்டும். அது, மாபெரும் தேசிய கவிஞருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் " எனக் கூறினார்.

'மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பில் பேசியதே மனித குலம் மறக்க முடியாத மாமனிதன் மகாகவி பாரதியின் இறுதிச் சொற்பொழிவாக அமைந்தது. அந்த நாள் இப்போது நூற்றாண்டைத் தொட்டுள்ளது. அதை நினைவில் ஏந்தி பாரதியார் புகழ் பாட வேண்டியது இந்த ஆட்சியாளர்களின் கடமை என்பதை உணர வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub