உலக நாடுகள் அனைத்தும் கரோனா அச்சத்தில் உள்ளன. நொடியில் பரவும் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதிலும், அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் முறையை கண்டறிவதிலும் உலக நாடுகள் பெரிய சாவல்களை சந்தித்து வருகின்றன.
இன்னொரு வகையில், சமூக இடைவெளி அவசியம் என்பதை வலியுறுத்தவும், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் ஏப்.14 வரை ஊரடங்கு, 144 லாக்டவுன் அறிவிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து மக்கள் அவரவர் வீடுகளில் முடங்கினர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் விதி மீறல்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
குறிப்பாக ஆலயங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கிற வகையில், ஆண்டவன் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் நன்மைக்காக இந்தக் கட்டுப்பாட்டை பொறுத்துக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 6ம் தேதி முக்கியத் திருவிழாவான பங்குனி உத்திரத்திருவிழா அன்று ஆலயங்கள் பூஜை தவிர்த்து மற்ற நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மக்கள் தங்களின் சாஸ்தாவை வணங்கமுடியவில்லை.
இந்நிலையில் பங்குனி உத்திர தினத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் – தென்காசி செல்லும் சாலையில் மலை மீதிருக்கும் ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோவில் ஆலயத்தில், காலை முதல் மதியம் வரை மக்களுக்கு அன்னதானம் நடந்திருக்கிறது. கரோனா தொற்றின் வீரியம் அதிகரித்த நிலையிலும் லாக்டவுனை மீறி நடந்ததால் தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் ஆலய நிர்வாகிகளின் மீது ஊரடங்குக் கட்டுப்பாட்டை மீறியதாக வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.