விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில், நீதிமன்ற உத்தரவின் படி, விசாரணைக் கைதிகளை அடைத்து வைக்கும் கிளைச் சிறை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த கிளைச் சிறையில், பல விசாரணைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தச் சிறையில், கடந்த பல ஆண்டுகளாகக் கைதிகளுக்கு உணவு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக உயரதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றுள்ளது.
இதையடுத்து, கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் நேற்று மதியம் திண்டிவனம் கிளை சிறைச் சாலைக்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேடு தொடர்பாக மதியம் மூன்று மணியிலிருந்து இரவு 8 மணி வரை விசாரணை நடத்தினார். பின்னர், முறைகேடு சம்பந்தமாகப் புகார் அனுப்பிய முதல்நிலை தலைமைக் காவலர் துர்கா பிரசாத் உட்பட அங்கிருந்த ஊழியர்கள் அனைவரிடமும் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கிளைச் சிறை உதவி அலுவலர் சுந்தர் பால் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரியவருகிறது.
ஆனால், அவர் இரு தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றுள்ளதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சுந்தர் பால் மீது புகார் அனுப்பிய தலைமைக் காவலர் துர்கா பிரசாத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இந்த கிளைச் சிறை நிர்வாகத்தை தற்போது செஞ்சி கிளைச் சிறை உதவி அலுவலர் முருகானந்தம் அவர்களிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதே கிளைச் சிறையில் பணிசெய்த பாரதி மணிகண்டன் என்பவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்த 3 ஊழியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.