திண்டுக்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்துவருபவர் யூசுப் அன்சாரி. இவரின் தாத்தா ரஹீம், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். இவரது தந்தை அஜீஸ், திமுக தொழிற்சங்க பிரமுகராக இருந்துள்ளார். இப்படி அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்துவந்தவர்தான் யூசுப் அன்சாரி.
தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து கொண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியது பாமகவில் மாவட்ட தலைவராக சில காலம் பணியாற்றி வரும்போதுதான் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார். அதன்பின் கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பாமகவில் இருந்து விலகி இருந்த அன்சாரி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை கண்டு அதிமுகவில் ஐக்கியமாகி உறுப்பினராக சேர்ந்தார்.
அப்போது முப்பெருந்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டவராய் அவரது தலைமையில் தொடர்ந்து கட்சிப்பணி செய்துவந்தார். இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனாவின் கோராத் தாண்டவத்தால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவிற்கே அல்லல்பட்டு வந்தபோது அன்சாரி, தான் பணிபுரியும் நிறுவனத்தின் உதவியுடன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தனது முயற்சியில் சுமார் பத்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து ஏழை, எளிய மக்களுக்கு உணவு, மளிகைப்பொருட்கள் என அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துள்ளார். இவரின் இந்த தாராள குணமும், ஏழை மக்களின் துயர் துடைக்கும் உள்ளமும் பொதுமக்கள் மத்தியில் மேலும் நல்ல பெயரை இவருக்கு பெற்றுத்தந்தது.
இந்நிலையில்தான் திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்டத்தை அதிமுக நிர்வாக வசதிக்காக திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதில் முன்னாள் முப்பெரும்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியை ஒ.பன்னீர்செல்வமும் முதல்வர் பழனிசாமியும் வழங்கினார்கள். அதை தொடர்ந்துதான் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றிய பெருந்தலைவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவருமான கண்ணனோ அன்சாரியின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் எடுத்துக்கூறினார். அதைதொடர்ந்து நத்தம் விஸ்வநாதனும் தலைமைக்கு பரிந்துரை செய்து, யூசுப் அன்சாரிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பதவிகொடுக்க வழிவகுத்தார். அதன் பேரில் தலைமையும் யூசுப் அன்சாரியை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளராக நியமித்தது.
அதை கண்டு பூரித்துப்போன யூசுப் அன்சாரி உடனே முன்னாள் முப்பெரும்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். நத்தம் ஒன்றிய பெருந்தலைவரும் விஸ்வநாதனையும் கண்ணனையும் சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று கட்சி வளர்ச்சிக்காக ஜெ பேரவைக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் களம் இறங்கி வருகிறார்.