சபரிமலையில் ஐப்பசி மாதம் நடைதிறந்த பிறகு, ஒவ்வொரு நாளும் அங்கு செல்லும் இளவயது பெண்கள் திருப்பி அனுப்பப்படுவது தினசரி செய்திகளில் ஒன்றாகி விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று சொன்ன, சொல்கிற அரசும் அரசியலுக்காக இரட்டை வேடம் போடுகிறது. எனவே, இனியாவது இளம்பெண்களே மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் அய்யப்ப பக்தர்கள்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஹரிகரன், "உச்சநீதிமன்றம் எங்களையும் சாமி கும்பிடலாம்னு சொல்லியிருச்சுன்னு சொல்கிற பெண்கள், இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அங்கே சென்றால் திருப்பி அனுப்பப்படுவது உறுதி என்று தெரிந்தும், வீம்புக்காக சென்று மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது நியாயம் தானா?. இதே சுப்ரீம் கோர்ட் காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடச் சொல்லி கர்நாடகத்திற்கு உத்தரவு போட்டது. அப்போது எத்தனை பெண்கள், கர்நாடக அரசை எதிர்த்தி கேள்வி கேட்டீர்கள்? எத்தனை மாதர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தது.? அதுவும் இதுவும் ஒன்றா என்று கேட்பீர்கள். இந்த தீர்ப்பை எதிர்த்து போட்ட ரிவியூ பெட்டிசன் இதே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதையும் உணருங்கள். எனவே, அய்யப்பனின் ஆலயம் இது விவாதம் செய்யும் இடமல்ல, போட்டி நடத்தும் பந்தயக் களம் அல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். இது ஆணாதிக்கத் தனம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிக்கும் அய்யப்பனுக்கு என்று சில ஆகம விதிகள் இருக்கிறது. என்றார்.
மற்றொரு பக்தரோ "பெண்ணுரிமை பேசும் பெண்ணியவாதிகளே, யுவதிகளே அடுத்த வாரம் சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்குகிறது. நாடு முழுவதும் ஒரு மண்டலம் விரதம் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கால கட்டத்தில் தான், இருமுடி கட்டி வருவார்கள். எனவே, இந்த கால கட்டத்தில் வந்து எங்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டார்.