2000 ஆண்டுகளுக்கு முன்பே நவநாகரிக வாழ்க்கை வாழ்ந்துள்ளனர், தமிழர்கள். இதனை எப்படி அறிய முடிகிறது? மனிதகுலம் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்ளவும், இன்றைய வளர்ச்சிக்கு முந்தைய அவர்களது நிலையைப் புரிந்து கொள்ளவும் உதவுபவை, அவர்கள் அன்றாடம் பயன்படுத்தி வந்த பழம்பொருட்களே ஆகும். தொல்லியல் அகழாய்வுகள் மூலம் இதனைக் கண்டறிந்துவருகிறோம்.
சிவகாசி அருகிலுள்ள வெம்பக்கோட்டை வைப்பற்றின் வடகரையிலுள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில், சங்கு வளையல் தொழிற்கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இங்கு கழுத்தில் அணியும் தந்தத்தினாலான பதக்கம், சங்கு வளையல்கள், சுடுமண் தொங்கட்டான்கள், குவளை சுடுமண்ணால் செய்த விளையாட்டுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தொன்மையான பொருட்கள் குறித்த தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்து, ’அப்போது சுடுமண்ணாலான பொருட்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். தொழிற்கூடத்தில் சங்கு வளையல்களை உருவாக்கி, அதனை வைப்பாற்றின் வழியே தூத்துக்குடிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து கடல் மார்க்கமாக வணிகம் செய்திருக்கக்கூடும்’ என்பதாக உள்ளது.