சட்டவிரோதமாக சாலையை மறைத்து வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றபட்டுள்ளதாகவும், அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்வதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, சென்னை அவ்வை சண்முகம் சாலை முதல் டிடிகே சாலை வரையும், சென்னை பல்கழைக்கழகம் முதல ரிசர்வ் வங்கி வரையும் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் வைக்கப்பட்டதாகவும், அதை அகற்ற கோரி காவல் துறைக்கு அளித்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என டிராபிக் ராம்சாமி புகைப்படங்களை இணைத்து தலைமை நீதிபதிக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு மார்ச் 1ஆம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேனரை அகற்றாமல் காவல் துறையும், மாநகராட்சியும் என்ன செய்து கொண்டு இருக்கிறது என கேள்வி எழுப்பியதுடன் உடனடியாக அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோதமாக சாலையையும், நடைபாதையையும் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றபட்டுள்ளதாகவும், அது தொடரான விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்வதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.