Skip to main content

''சின்ன சின்ன பிரச்சனை தான்; அதற்கான திறமையும் எனக்கு இருக்கிறது'' - தமிழிசை பேட்டி

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

 ''It's a small problem; I have the talent for that too'' - Tamil interview

 

'எங்களால் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை மன உளைச்சலாக இருக்கிறது' என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவரின் கருத்து குறித்து புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''இது வீட்டுக்குள்ள இருக்கிற சின்ன சின்ன பிரச்சனை போன்றதுதான். இதில் மக்களைப் பாதிக்கக் கூடிய விஷயம் எதுவுமே இங்கு நடக்கவில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம். அவர் ஏன் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதை நான் நேரடியாகக் கேட்டு அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தீர்த்து வைப்பேன். அதைத் தீர்த்து வைக்கக்கூடிய மனநிலை எனக்கு இருக்கிறது. அதற்கான திறமையும் எனக்கு இருக்கிறது. எனவே அவர் அப்படி ஒன்று சொல்லிவிட்டார் இதனால் துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் மத்திய அரசுக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கக் கூடாது.

 

இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அண்ணன் தங்கச்சி அக்கா தம்பிக்குள் வர பிரச்சனைதான் இது. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் என வெளியிலிருந்து உள்ளே வந்து யாரும் கொண்டாடுவதற்கு நாங்கள் விடமாட்டோம். என்னைப் பொறுத்தவரை எல்லாம் சரியாக தான் நடந்து கொண்டிருக்கிறது'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'முன்னாள் ஆளுநர் கிரண்பேடி விஷம் வைத்து கொல்வார்; ஆனால் தமிழிசை சர்க்கரை கொடுத்துக் கொல்வார் என விமர்சிக்கிறார்களே’ என்ற கேள்விக்கு, பதிலளித்த தமிழிசை,  ''முதலில் நான் சக்கரை கொடுப்பேன் என்று சொன்னதுக்கு நன்றி. நான் இனிமையான ஒரு டாக்டர். நான் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்குக் கூட சர்க்கரை கொடுத்துக் கொல்லமாட்டேன். சர்க்கரை கொடுத்து யாராவது கொல்ல முடியுமா? விஷம் கொடுத்து கொல்ல முடியும். வார்த்தையிலேயே இது தப்பு. இங்கு யாருக்கும் சர்க்கரை நோய் இல்லை. எல்லாம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள். வேண்டுமென்றால் சர்க்கரைக் கொடுத்துச் சொல்லுவேன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார் கிண்டலாக.

 

 

சார்ந்த செய்திகள்