Skip to main content

“தமிழர் என்ற தகுதி இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை” - புத்தகக் கண்காட்சியில் முதல்வர் உரை

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

 

 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 46 ஆவது புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சிக்காக கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் 6 எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய முதல்வர், “எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்குவது நாட்டில் அறிவொளி பரவ வேண்டும் என்பதற்குத்தான். வீட்டிற்கு ஒரு நூலகம் அமைய வேண்டும் என ஆசைப்பட்டவர் பேரறிஞர் அண்ணா. அத்தகைய நோக்கத்தை உருவாக்கவே மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனைத்து விதமான உதவிகளைச் செய்கிறது. புத்தகங்களின் மீது காதல் கொண்டவர் கலைஞர். 

 

மதுரையில் கலைஞர் பெயரால் 114 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய அரசு திட்டமிட்டு அது திறக்கப்பட உள்ளது. ஏராளமான தமிழ்காப்புத் திட்டங்களை திராவிட அரசு செயல்படுத்துகிறது. பதிப்பகங்களோடு போட்டிப் போட்டு தமிழக அரசு ஏராளமான நூல்களை வெளியிடுகிறது. சென்னையில் நிரந்தரமாக புத்தகப்பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக் காலத்தில் தமிழுக்கும் எழுத்துக்கும் அளவில்லாத ஆக்கப் பணிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதை யாராலும் மறக்க முடியாது. எழுத்தும் இலக்கியமும் மொழியை வளர்க்கின்றன. வளர்ப்பது மட்டுமல்ல காக்கின்றன. இது போன்ற புத்தகச் சந்தைகளும் இலக்கிய விழாக்களும் இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டப் பயன்படுகிறது.

 

மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம் பண்பாடு சிதைந்து விடும். பண்பாடு சிதைந்தால் நம்முடைய அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நாம் இழந்து விடுவோம். தமிழர் என்ற தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை. எனவே மொழியைக் காப்பதற்கான கடமை என்பது எங்களைப் போன்ற அரசியல் இயக்கங்களைப் போலவே எழுத்தாளர்களுக்கும் இருந்தாக வேண்டும். தங்களது எழுத்தை மொழி காப்பதற்கான மக்கள் எழுத்தாகப் பயன்படுத்த வேண்டும்” எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்