Skip to main content

“தமிழக அரசே இதற்கு உடந்தையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” - பாமக அன்புமணி ஆவேசம்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

 "It is unacceptable that the Tamil government is complicit in this" - Pamaka Anbumani Ramadoss interview

 

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில், பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

 

போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றார். அப்போது அவரைக் கைது செய்த காவல்துறையினர் பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கிருந்த பாமகவினர் அன்புமணி இருந்த பேருந்தை முற்றுகையிட்டனர். மேலும் தடுப்புகளை மீறி போலீசார் மீது பாமகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தக் கல்வீச்சு தாக்குதலில் காவல்துறையினருக்குப் படுகாயம் ஏற்பட்டதால் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 

 

இந்தப் போராட்டத்தின்போது பாமகவினர் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 8 பேரும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 6 செய்தியாளர்களும் காயமடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கேமரா உள்ளிட்ட ஒளிபரப்புப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

 "It is unacceptable that the Tamil government is complicit in this" - Pamaka Anbumani Ramadoss interview

 

போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு கைது செய்யப்பட்ட வாகனத்தில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ''இது கட்சிப் பிரச்சினை கிடையாது. ஜாதிப் பிரச்சனையோ, மதப் பிரச்சனையோ கிடையாது. நம்முடைய மண்ணைப் பறித்துக் கொண்டிருக்கின்ற என்.எல்.சி நிர்வாகம் இனி தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. என்எல்சியின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகிவிட்டது. தமிழ்நாட்டின் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்கின்றோம் என்று அமைச்சர் சொல்லுகின்ற நேரத்தில், என்எல்சி நமக்குத் தேவையில்லை. காரணம் மண்ணையும், மக்களையும் அழித்து அதில் மின்சாரம் எடுப்பது, இது மிகப்பெரிய குற்றம். இது தவறு. இந்தத் தவறுக்கு தமிழக அரசு உடந்தையாக இருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இது என்.எல்.சி பிரச்சனை கிடையாது. இது ஏதோ கடலூர் பிரச்சனை கிடையாது. தமிழ்நாட்டினுடைய வாழ்வாதாரப் பிரச்சனை. தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனை.

 

இதற்கான தொடர் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்த இருக்கிறது. இன்னும் நடத்தும். மீண்டும் எச்சரிக்கிறோம். தமிழக அரசே என்எல்சிக்கு உடந்தையாக இருக்காதீர்கள். விளை நிலங்களைக் கையகப்படுத்தாதீர்கள். அதை நிறுத்திக் கொள்ளுங்கள். என்எல்சி ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தை அழித்துவிட்டது. எட்டு அடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று கடலூர் மாவட்டத்தில் 800 அடிக்குச் சென்றுவிட்டது. அதற்குக் காரணம் என்எல்சி. உள்ளூர் மக்களுக்கு வேலை கிடையாது. பக்கத்தில் வாழ்வாதாரம் கிடையாது. தொடர்ச்சியாக அழித்துக் கொண்டிருக்கின்ற  என்.எல்.சி நிர்வாகம் இனி தேவையில்லை'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்