'மாறி மாறி பலி சுமத்திக் கொள்கிறார்களே தவிர தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறைக்கும் முடிவு கிடைக்கவில்லை' என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ''பாஜக மாநில தலைவரை எப்படி வெளியே அனுப்புவது என்று தெரியாமல் பாஜக தவித்துக் கொண்டிருக்கிறது போல் தெரிகிறது. இப்பொழுது தமிழ்நாடு அமைதியாக இருப்பதை போல் தெரிகிறது. அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் தற்பொழுது தமிழக பாஜகவில் பொறுப்பேற்று இருக்கிறார்கள். உண்மையிலேயே பாஜக தொண்டர்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்திற்கும் என்று எல்லோரும் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. முதல் பிரச்சனை கல்விக்கு கூட நிதி வாங்க முடியாத கையாலாகாத நிலையை நாம் பார்க்கிறோம். அதற்கு நிபந்தனை விதிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொல்கிறார். முதலமைச்சரும் கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் மத்திய அரசு தருவதாக தெரியவில்லை. நேற்றுகூட கல்வி அமைச்சர் இதில் அரசியல் சாயம் பூசக்கூடாது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். எது எப்படி ஆயினும் மாணவர்களுக்கு நிதி இல்லாமல் கல்வி கற்கக்கூடிய புனிதப் பணி தடை பட்டுவிடக்கூடாது. மத்தியில் ஆளுகின்ற கட்சி மாநிலத்தில் ஆளுகின்ற கட்சி இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பலி சுமத்திக் கொள்கிறார்களே தவிர தமிழ்நாட்டு மாணவர்களுக்கும்பள்ளி கல்வித்துறைக்கும் முடிவு கிடைக்கவில்லை. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி கவலையோடு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்'' என்றார்.