கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாவட்டச் செயலாளர் செல்வகணபதி என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையின் மேல் தளத்தில் தீபாவளி பண்டிகைக்காகப் பட்டாசு விற்பனை செய்ய, பட்டாசுகளை வாங்கி வைத்துள்ளார். இந்த நிலையில், அந்த கடையில் கடந்த 26ஆம் தேதி இரவு தீவிபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.
இதனால் ஏற்பட்ட தீ, அந்தக் கடையின் பக்கத்தில் இருக்கும் பேக்கரி கடைக்கும் பரவியதைத் தொடர்ந்து, பேக்கரி கடையில் இருந்த 8 எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின. இதில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது மட்டுமின்றி, பக்கத்துக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், அந்தக் கடையின் அருகே இருந்த தியாக துருகத்தைச் சேர்ந்த ஷா ஆலம் (24), சங்கராபுரத்தைச் சேர்ந்த சையத் காலித் (22), ஷேக்பஷீர் (60), நாசர் (60) மற்றும் அய்யாசாமி (65) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் நேற்று காலை கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் கிடந்த வள்ளி(62) மற்றும் சிறுவன் தனபால்(11) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 11 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சங்கராபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. இந்தச் சம்பம் தமிழ்நாடு முழுக்க பெரும் கவலையை ஏற்படுத்தியது.
பட்டாசுக் கடை நடத்த உரிமம் பெற்றுள்ள செல்வகணபதி, விதியை மீறி அதிகளவிலான பட்டாசுகளை அங்குச் சேமித்து வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. விபத்து நிகழ்ந்த பகுதியை நேற்று பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, நிவாரணத் தொகையை அரசு உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இன்று மளிகைக் கடை உரிமையாளர் செல்வகணபதி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய தமுமுக கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் பசல் முஹம்மது, “நேற்று முன்தினம் இரவு இவ்விபத்து ஏற்பட்டது. அந்தக் கடையின் மேல் மாடியில் குடோனாகவும், கீழே மளிகைக்கடையாகவும் செயல்பட்டுவருகிறது. அக்கடையின் பக்கத்தில் பேக்கரி இருக்கின்றது. பொதுவாகத் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் சிலிண்டர்கள் உபயோகம் அதிகமிருக்கும். அதனடிப்படையில் அக்கடையிலும் சிலிண்டர் இருந்திருக்கிறது. அதிகளவில் பட்டாசுகளைச் சேமித்து வைத்ததன் காரணமாகவே அக்கடையில் தீவிபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த பேக்கரிக்கும் தீப் பரவி, சிலிண்டர்கள் வெடித்து பெரும்விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்றவர்கள் தான் இறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் குடும்பத்தைக் காக்கும் வயதுடையோர்.
இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திப்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார். அப்போதுதான் தெரிகிறது, கடை பாஜக மாவட்டச் செயலாளருடையது என்று. இதில் ஒன்றும் குழப்பமில்லை. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்க்க வந்த அண்ணாமலை, தான் கடந்து வந்த பாதையில் உள்ள உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது. எழுத்தாளரும் தமிழ்ப் படைப்பாளர் சங்கத்தின் தலைவருமான குறிஞ்சி அரங்க செம்பியன் வீட்டுக்குச் சென்ற தமுமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி ஆறுதல் கூறினர். தமிழக அரசு சார்பாகக் காயப்பட்டவர்களுக்கு ரூ. 1 இலட்சமும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சமும் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை, காயம்பட்டவர்களுக்கு ரூ.5 இலட்சமாகவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சமாகவும் வழங்கி, அவர்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.