தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த கிராமமான இராமேஸ்வரப்பட்டி பகுதியில் 25 இடங்களிலும், கரூர் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பாலக்காடு, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமாக 200 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே சோதனை நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மினாமி என்று சொல்லப்படும் ஸ்ரீ கணேசன் முருகன் பஸ் சர்வீஸ் உரிமையாளரான குணசேகரன் அலுவலகத்தில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது உள்ளே சென்று வெளியே வந்த அதிகாரிகள், நீங்கள் சோதனைக்கு ஒத்துழைப்பு தருகிறோம் என்று சொன்னீர்கள். ஆனால் கடைசி நேரத்தில் தொண்டர்களை திரட்டி தகராறு செய்கிறீர்கள் என்று கூறிவிட்டு எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றனர். இதுகுறித்து நாம் குணசேகரனிடம் பேசியபோது, “அலுவலகத்தில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் எங்கள் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தராமல் தொண்டர்களை திரட்டியுள்ளீர்கள் என்று எஸ்.பி அலுவலகத்திற்குப் புகார் அளிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்” என்றார்.
இதனிடையே கரூர் மாவட்ட எஸ்.பி, கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் சிஆர்பிஎஃப் வீரர்களையும் அழைத்து வரவில்லை. கார் கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். மேலும் சோதனை நடக்கும் இடங்களுக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.