அனுமதியின்றி கட்டடங்களைக் கட்டிவிட்டு அதை வகைப்படுத்த அனுமதி கோருவது ஏற்புடையது அல்ல என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலவிக்னேஷ் என்பவர் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் ஏராளமான கல்லூரிகள், மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய சிறை போன்றவை உள்ளன. இப்படி ஏராளமான கட்டடங்கள் தொடர்ச்சியாக நெருக்கமாக கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளதால் இந்தப் பகுதி நெல்லை மாவட்டத்தின் முக்கிய வருவாய் பகுதியாக உள்ளது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் குறுகலான சாலைகள் உள்ளதாக வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாநகராட்சியில் இந்தப் பகுதி தொடர் கட்டட பகுதியாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகவும் அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே மாநகராட்சியின் தீர்மானத்தை ஏற்று தொடர் கட்டட பகுதியாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகவும் அறிவிக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் ஏன் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. தீயணைப்பு வண்டி கூட செல்ல முடியாத அளவுக்கு சாலையில் போதிய இடம் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமதியின்றி கட்டடங்களைக் கட்டிவிட்டு அதை வகைப்படுத்தக் கூறுவது ஏற்புடையதல்ல எனக்கூறி இந்த வழக்கில் அரசுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.