கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த சில நாட்களாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் 'மாஸ்டர்' படப்பிடிப்பு நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று மதியம் சென்னையிலிருந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்க பகுதிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 'நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும்' என கூறியுள்ளனர். ஆனால் நுழைவாயிலிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அவர்களை சுரங்க பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. பின்னர் என்.எல்.சி உயர் அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்று படப்பிடிப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டவர்கள் தங்களுடன் சென்னைக்கு வருமாறு நடிகர் விஜய்யை அழைத்துள்ளனர்.
அதற்கு விஜய் 'மாலை படப்பிடிப்பு முடிந்ததும் வருகிறேன்' என கூறியுள்ளார். அதற்கு அவர்கள் "நாங்கள் ஷூட்டிங் பார்க்க வரவில்லை. விசாரணைக்காக வந்திருக்கிறோம். உடனே எங்களுடன் கிளம்புங்கள்" என்று கூறினர். "சரி, நான் எனது காரில் வருகிறேன். நீங்கள் முன்பாக செல்லுங்கள்" என்று விஜய் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், "அப்படி எல்லாம் தனித்தனியாக வர முடியாது. எங்கள் காரிலேயே நீங்கள் வாருங்கள்" என்று அவர்கள் காரில் ஏற்றுக்கொண்டனர்.
அதன்பிறகு விஜய் உடைய காரை ஜாக்குவார் தங்கம் வருமானவரித்துறை அதிகாரிகளுடனே ஓட்டிச் சென்றுள்ளார். படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் மற்ற காட்சிகள் தொடர்ந்து சுரங்க பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள
விஜயின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.