ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகையை முன்னிட்டு மதுரை விமானம் நிலையம் முதல் மாநகர் முழுவதிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதோடு, ஆங்காங்கே வாகன தணிக்கைகளும் நடத்தப்பட்டது. இதேபோல் அவர் தங்கும் விடுதிகளிலும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும், மதுரை மாநகராட்சி சார்பில் விமான நிலையத்திலிருந்து அவர் கலந்துகொள்ளும் சாய்பாபா கோவில் அமைந்துள்ள சத்யசாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைத்து தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளைப் பராமரிக்கவும், அவரின் வருகையின்போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதைக் கண்காணிக்கவும் மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சியின் உதவி ஆணையாளர் சண்முகம் (பணியமைப்பு) உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மதுரை மாநகராட்சியின் உத்தரவு குறித்து மதுரை தொகுதியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அரசின் எந்த விதிகளின்படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து, துணை ஆணையர் சண்முகத்திற்கு பணி விடுவிப்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு தமிழ்நாடு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. துணை ஆணையர் சண்முகத்தின் பணி விடுவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''அதிஉயர் பாதுகாப்பு கொண்ட தலைவருக்காக வழக்கமான நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்துள்ளனர். பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவருக்கு உரிய வசதி செய்துகொடுப்பது சட்டவிரோதமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.