Skip to main content

கையெழுத்துப் போட வலியுறுத்துகிறார்கள்..! நீதி கிடைக்குமா என்பது சந்தேகம்..! மரணமடைந்த கைதியின் மனைவி ஆவேசம்

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

It is doubtful whether will get  justice

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன்(40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும், மதன்(26) என்ற மகனும், லீனா(12) என்ற மகளும் உள்ளனர். முந்திரி வியாபாரம் செய்து வந்த இவர்கள், தொழில் சம்பந்தமாகச் சொந்த ஊரான காடாம்புலியூரிலிருந்து நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்தனர். 
 

இந்நிலையில், கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி பிளாக் எண் 26 - ல் காவியா என்ற பெண் அணிந்திருந்த செயினைப் பறித்ததாக செல்வமுருகன் மீது நெய்வேலி வடக்குத்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டார். பின்னர், விருத்தாசலம் கிளைச் சிறையில் கடந்த 30.10.2020 அன்று அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 02-ஆம் தேதி செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகக் கூறி சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்பு செல்வமுருகனை விருத்தாச்சலம் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.  மீண்டும் கடந்த 04-ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

 

அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி பிரேமாவுக்கும், நெய்வேலி மற்றும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில்  குற்றவியல் நடுவர் ஆனந்த், வீடியோ ஆதாரத்துடன், செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த செல்வமுருகன் உடலை உறவினர்கள் முன்னிலையில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் செல்வமுருகன் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 


அதேசமயம், செல்வமுருகன் மனைவியான பிரேமா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம் தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் உயிரிழந்ததாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்தார்.


மேலும், பிரேமா மற்றும் பிள்ளைகள், உறவினர்களுடன் 06.11.2020 அன்று சென்னை- கும்பகோணம் சாலை காடாம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி பாபு பிரசாந்த், வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் பிரேமா, தன்னுடைய கணவர் சாவில் மர்மம் இருக்கிறது, போலீசார் தான் அடித்துத் துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக சந்தேகப்படுகிறேன். எனவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், தனது குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணம் வழங்கவேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளைக் கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.  

 

அதேசமயம் 07.11.2020 அன்று கிளைச் சிறையில் கைதியின் இறப்பு குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்த் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டார். 

 

cnc

 

இதனிடையே காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்டதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாகக் கூறி அவரது இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்     


மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல், செல்வமுருகன் மனைவி பிரேமா, தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் துன்புறுத்தியதாகவும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பேரில் டி.ஐ.ஜி திரிபாதி, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐடி போலீசார் வழக்குப் பதிந்து நெய்வேலி காவல் நிலையம் மற்றும் விருத்தாசலம் கிளைச் சிறையில் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் அடங்கிய குழுவினர் விசாரித்ததுடன் தொடர்ந்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஆனாலும் தனது கணவர் சாவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், செல்வமுருகனின் மனைவி பிரேமா சடலத்தை இன்னும் வாங்கவில்லை. அத்துடன் தனது கணவர் மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும் என பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளார்.

 

இந்நிலையில், விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்த் நீதிமன்ற வளாகத்தில் பிரேமா மற்றும் அவரது உறவினர்கள் 6 பேரிடம் நேற்று (10.11.2020)  மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார். ஆனால், விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி வெளியே வந்த செல்வமுருகனின் மனைவி பிரேமா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "கடந்த 05-ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், இறந்துபோன எனது கணவரின் உடலை பார்ப்பதற்கு, குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்த்  கூறியதால், வீடியோ ஆதாரத்துடன் சென்று பார்த்தோம் என்றும், ஆனால் தற்போது நீதிபதி விசாரணையில், நாங்கள் வற்புறுத்தியதாகவும், அதனால் எனது கணவரின் உடலை எனக்கும், எனது உறவினர்களுக்கும் காண்பிக்கப்பட்டது என்று கூறியதாகவும், அதற்காக அவர்கள் தயாரித்த அறிக்கையில் கையெழுத்திடுங்கள் என்று கூறினர்.


என் கணவர் இறந்த போது போலீசார் மற்றும் அதிகாரிகள் கூறிய பதிலுக்கும் இன்று நீதிமன்றத்தில் கூறும் தகவல்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் எங்களுக்குப் போதுமான நீதி கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆதலால், நீதிபதி விசாரணை திருப்தி அளிக்காததால், அவர்களது அறிக்கையில் கையெழுத்துப் போடாமல் வெளியே வந்துவிட்டோம்.

 

nkn

 

என் கணவர் மரணத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நானும் என் பிள்ளைகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனது கணவரின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் உறவினர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யாமல் போனதாலும், உரிய நீதி கிடைக்காததாலும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்" என்று கூறினர்.


 

 

சார்ந்த செய்திகள்