குடிபோதையில் பெற்ற தந்தையையே இரும்பு நாற்காலியால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவியும், குழந்தைகளும் தன்னை விட்டுப் பிரிந்து செல்ல காரணமாக இருந்ததால் தந்தையைக் கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலத்தை அடுத்த வீராணம் அருகே உள்ள துக்கம்பட்டி காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் சித்தமலை (75). இவருடைய மனைவி சின்னபிள்ளை (65). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவர்களில் மூத்த மகன் இறந்து விட்டார். இரண்டாவது மகன் முருகேசன் (45), கடைசி மகன் பெரியசாமி (35). இருவரும் கூலித்தொழிலாளிகள். முருகேசனின் மனைவி கோகிலா. பெரியசாமியின் மனைவி பிரியா. இவர்கள் இருவரும் உடன் பிறந்த அக்காள் & தங்கைகள்.
அண்ணன், தம்பி இருவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில், கணவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோகிலாவும், பிரியாவும் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இதையடுத்து பெரியசாமி தன் தந்தையுடன் துக்கம்பட்டி காந்திநகர் காலனியில் சொந்த வீட்டிலும், முருகேசன் தாயுடன் சுந்தர்ராஜன் காலனியில் ஒரு வாடகை வீட்டிலும் வசித்து வந்தனர்.
இதற்கிடையே, பெரியசாமி மது குடித்துவிட்டு அடிக்கடி போதையில் தன் மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் தன் தந்தைதான் எனக்கூறி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். மே 30ஆம் தேதி இரவன்றும் மகன் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்த சித்தமலை, மகன் தூங்கியபிறகு வீட்டுக்குள் செல்லலாம் எனக்கருதி வெளியே சென்றுவிட்டார். பின்னர், நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் சென்றுள்ளார். ஆனால் அப்போதும் தூங்காமல் இருந்த பெரியசாமி, தன் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில், ஆத்திரம் அடைந்த பெரியசாமி, வீட்டில் இருந்த இரும்பு நாற்காலியை எடுத்து சித்தமலையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் அடிப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தந்தை இறந்துவிட்டார் என்பதை அறிந்து பதற்றம் அடைந்த பெரியசாமி, யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக தந்தையின் உடலை புதைத்துவிட முடிவு செய்துள்ளார். அதனால், வீட்டுக்கு முன்புறம் குழி தோண்டியுள்ளார்.
அர்த்த ராத்திரியில் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். சித்தமலை சடலமாகக் கிடப்பதும், பெரியசாமி கடப்பாரையால் குழி தோண்டிக் கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து உடனடியாக வீராணம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.
காவல்துறையில் பெரியசாமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
''என் மனைவி பிரிந்து செல்ல என் தந்தைதான் காரணம். அவர் அடிக்கடி மருமகள் என்றும் பாராமல் கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டே இருப்பார். அதனால்தான் என்னுடைய இரண்டு குழந்தைகளுடன் அவள் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
நாங்கள் இருக்கும்போதே என் தந்தை தெருவில் பலரிடம் கையேந்தி பிச்சை எடுப்பார். அவருக்கு யாராவது காசு போடாவிட்டால் அவர்களைத் திட்டுவார். அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது.
அவரை பிச்சை எடுக்க வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டார். இதனால் அவரைப் பார்த்தாலே எனக்கு எப்போதும் கோபம் வரும். சம்பவம் நடந்த அன்றும் குடிபோதையில் இருந்த என்னிடம் அவர் வாக்குவாதம் செய்ததால், ஆத்திரத்தில் இரும்பு நாற்காலியால் அடித்தேன். அவர் செத்துவிட்டார்,'' என்று கொலையாளி பெரியசாமி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம், வீராணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.