சேலத்தில், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம், செவ்வாய்பேட்டை மூங்கப்பாடி தெருவைச் சேரந்தவர் பத்மாவதி (73). கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி அப்பகுதியில் உள்ள பஜனை மடத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், பத்மாவதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
பத்மாவதி அளித்த புகாரின்பேரில் செவ்வாய்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான தனிப்படையினர் கர்நாடகா மாநிலம், பிதார் மாவட்டம், ராணிஹள்ளி பகுதியில் தீவிர தேடுதலில் இறங்கினர். பிதார் மாவட்டம், ஜார்ஜின்சோலி பகுதியைச் சேர்ந்த ஆசிக் அலி மகன் முகமத் ஆசிப் அலி (23), பத்ரோதின் காலனியைச் சேர்ந்த அப்துல்ஜப்பார் மகன் ஷபி என்கி ஷபிஷேக் (30) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களை சேலத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்து நகை பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சொகுசு கார், ஒரு மோட்டார் சைக்கிள், 6 பவுன் நகை ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சேலம் உள்பட பல இடங்களில் தனியாக நடந்த செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. கைதான இருவரையும், காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் ஏப். 17ம் தேதி இரவு அடைத்தனர்.
நகை பறிப்பில் ஈடுபட்டதாக அவர்களின் கூட்டாளிகள் 3 பேர் மும்பையில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை தேடி தனிப்படையினர் விரைந்துள்ளனர். இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் தீர்மானித்து உள்ளனர். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.