காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
திருவல்லிக்கேணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். ஐபிஎல் போட்டியை உடனே நிறுத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
அப்போது நக்கீரன் இணையதளத்திடம் பேசிய வன்னி அரசு,
தமிழ்நாட்டு உரிமைகளை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு மத்திய அரசிடம் காவு வாங்கியிருக்கிறது. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை போகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், கிரிக்கெட் என்ற பெயரில் போராட்டத்தையும், போராட்டத்தின் வீரியத்தையும் திசை திருப்பும் வகையில் தமிழகத்தில் ஐ.பி.எல். நடக்கிறது. தமிழ்நாடே எழுவு வீடு போல் இருக்கும் நேரத்திலே ஐபிஎல் போட்டியை இங்கு நடத்தக் கூடாது. இந்தப் போட்டியை இப்போது நடத்துவது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும். தமிழக மக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இந்தப் போட்டியை இங்கு நடத்தக் கூடாது. இவ்வாறு கூறினார்.