கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
சசிகலா தம்பி திவாகரனுடன் சாதாரணமாக இருந்தவருக்கு திவாகரன் கட்சி பதவி மற்றும் எம்.எல்.ஏ சீட் வாங்கிக் கொடுத்ததுடன், ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியும் பெற்றுக் கொடுத்தார். ‘எனக்கு இந்த பதவி கிடைக்க அண்ணன் திவாகரன் தான் காரணம்’ என்று ஒரு பொதுக்கூட்டத்திலேயே நன்றி கூறினார். சாதாரணமாக இருந்தவர் அமைச்சரானதும் படிப்படியாக தனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர் பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்தார். உணவுத்துறை அமைச்சரானதும் வெளி மாநிலங்களில் நவீன பருப்பு மில் தொடங்கியதாகவும் அப்போது கூறப்பட்டது.
அதே போல, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இவரது துறையில் கிருஷ்டி நிறுவனத்தில் பருப்பு கொள்முதல் செய்ததில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அப்போதைய எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். அதற்கான விசாரணையும் நடந்தது. அடுத்து வந்த தேர்தலில் இந்த பருப்பு ஊழல் பற்றி விசாரிக்கப்படும் என்று தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த நிலையில், தற்போது அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ, அவரது மகன்கள் டாக்டர் இனியன், இன்பன், உறவினர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் ரூ.58.44 கோடிக்கு சொத்துகள் சேர்த்ததாக திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குப் பதிவின் அடிப்படையில் இன்று அதிகாலை முதல் மன்னார்குடியில் காமராஜ் வீடு மற்றும் அலுவலகம், அவரது உறவினர்களான குமார், பி.என் பாஸ்கர், பைங்காநாடு ராதா வீடு, கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி வீடுகள் நன்னிலம் வீடுகள் உள்பட 10 இடங்களிலும் மற்றும் தஞ்சை பூக்காரத் தெருவில் காமராஜ் சம்மந்தி டாக்டர் மோகன் வீடு மற்றும் காமராஜ் மகன் மருமகளுக்காக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனை உள்பட 5 இடங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை முதல் சோதனை தொடங்கியுள்ள நிலையில், மன்னார்குடியில் ஆர்.காமராஜ் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் நூற்றுக் கணக்கானோர் திரண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.