சென்னை வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசியத் தகவலின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் விசராணையில் இறங்கினர். அதில், சென்னையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முதியவர் தனக்கு திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்தான் பள்ளி மாணவியை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், அவருடன் பணம் கொடுத்து உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் சந்தேகத்தின் பேரில் 37 வயதான திவ்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளியில் படிக்கும் மாணவிகளைத் தனது மகள் மூலம் திவ்யா பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்தது தெரிய வந்தது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவிகளைப் பள்ளியில் படிக்கும் தனது மகள் மூலம் தெரிந்துகொள்ளும் திவ்யா, அவர்களை டார்கெட் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அப்படி, ஆசை வார்த்தையைக் கூறி வளையில் வீழ்த்தும் மாணவிகளை திவ்யா வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், பாலியல் தொழிலில் 18 வயது நிரம்பாத மாணவிகளை ஈடுபடுத்தி வந்த திவ்யா ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை மாணவி ஒருவருக்கு பணம் வசூல் செய்த அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, பாலியல் தடுப்பு போலீசார் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய திவ்யா, அவருக்கு உதவிய அவரது உறவினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரை அதிரடியாக கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தலைநகரில் கடந்த ஓராண்டகச் செயல்பட்டு வந்த இந்தக் கும்பல் 17 பள்ளி மாணவிகளையும், 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளையும் பாலியல் தொழிலுக்குத் தள்ளியதாகக் கூறப்படுகிறது.
அதிலும், ஒரு சிறுமியை ஆண்டு தேர்வு நடக்கும் போது ஹைதராபாத் அழைத்துச் சென்று பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தி, பின்னர் மீண்டும் அவசர அவசரமாகத் தமிழகம் அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த கொடுமையையும் போலீசார் கண்டறிந்தனர். இதனால், இந்தக் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாணவிகளை பாலியல் தொழிலுக்கு மிரட்டி ஈடுபடுத்திய திவ்யாவிற்குப் பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியுடன் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது, ஆளுநர் மாளிகை உண்மைக்குப் புறம்பாக சில தகவலை வெளியிட்ட நிலையில், இந்த வழக்கைத் தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து விசாரித்து வருகிறது. மறுபுறம், கருக்கா வினோத் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் ஜாமீனில் எடுத்தது பாஜகவா? யார் என்று விவாதம் நடைபெற்ற நிலையில், என்.ஐ.ஏ தற்போது பாலியல் வழக்கில் சிக்கியுள்ள திவ்யாதான் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததாக அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளது.
இதனிடையே, சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திவ்யாவின் வீட்டின் சோதனையில் ஈடுப்படனர். அதில், கைப்பற்றப்பட்ட 5 செல்போனை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அந்த செல்போன்களில் சிறுமிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அதன் விளைவாகத்தான் திவ்யா சிக்கியதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், கருக்கா வினோத், திவ்யா தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தப் பாலியல் கும்பல் யார் யாருக்குச் சிறுமிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்ற பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது.