சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையின் அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சோதனை நடத்தப்பட்டது.
அப்போது நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு இந்தியன் வங்கி தங்க நகை மதிப்பீட்டாளர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து 13 மணி நேரச் சோதனைக்குப் பிறகு நேற்று இரவு 7:55 மணிக்கு பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 3.30 மணி வரை என சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார். அதே சமயம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜாராக சம்மன் கொடுத்துள்ளது. மேலும் பொன்முடியின் மகனும் எம்.பியுமான கௌதம சிகாமணியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.