சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறையிலடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் இருவர் உள்ளிட்ட 5 பேரை 14ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரித்தனர். சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகு அவர்கள் அனைவரும் மீண்டும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் வெயில் முத்து, சாமதுரை, செல்லத்துரை ஆகிய மூன்று காவலர்களை காவலில் விசாரிக்க சி.பி.ஐ. அனுமதி கோரிய நிலையில் மூன்று நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டு அவர்களிடமும் 2 நாட்களாக சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இன்று காலை வரை விடிய விடிய விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் சாமதுரைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு மதுரை ஆயுதப்படை காவலர்களுக்கான மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். தற்பொழுது செல்லதுரை, சாமதுரை, வெயில் முத்து ஆகிய மூவரையும் சாத்தான்குளம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்களையும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என்ன நடந்தது என்பதை எல்லாம் நடித்துக் காட்டச் சொல்லி வீடியோ பதிவு செய்திருந்தனர். அதேபோல் தற்போது இவர்களிடமும் அதுபோன்ற ஒரு விசாரணை நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 5 காவலர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கூறிய தகவலும், 3 காவலரிடம் நடத்தப்படும் விசாரணையில் அவர்கள் தெரிவிக்கும் தகவலும் ஒன்றாக உள்ளதா என்ற கோணத்திலும் சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.