கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.