சிதம்பரம் அருகே உள்ள மேல் அனுவம்பட்டு, கீழ் அனுவம்பட்டு கிராமங்களில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் தங்கி விவசாயம் சம்பந்தமான பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி முதல்வர் அங்கயற்கண்ணி கலந்துகொண்டு சிறுதானிய கண்காட்சியை துவக்கி வைத்து சிறுதானியங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வேளாண் விரிவாக்கத்துறை தலைவர் தமிழ்செல்வி விவசாயிகளுக்கு இலவச பழமரக்கன்றுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
வேளாண் விரிவாக்க துறை இணைப் பேராசிரியர்கள் சண்முகராஜா, சக்திவேல், மீனாம்பிகை, உழவியல் துறை இணை பேராசிரியர் பாபு, ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மேல் அனுவம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் தவமணி மருதப்பன், துணைத் தலைவர் கலா அய்யாசாமி, கீழ் அனுவம்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் அட்மா கமிட்டி தலைவர் மனோகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியை மாணவிகளின் குழு தலைவிகள் ஷாஷினி , சித்திகா, துணைத் தலைவிகள் ஷர்மி மற்றும் சிந்து உள்ளிட்ட 30 பேர் ஏற்பாடு செய்து இருந்தனர்.