தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீப காலமாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார், ஐ.டி. விங் செயலாளர் திலிப் கண்ணன், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதி ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் லதா, வைதேகி ஆகிய இரண்டு பாஜக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாஜகவின் ஐ.டி விங் நிர்வாகிகள் 10 பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் நிர்மல் குமார் தலைமையில் அதிமுகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கோவையில் சாதனை மகளிர் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக விழா நடைபெறும் அரங்கத்திற்கு அண்ணாமலை வந்த போது பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து விழா நடைபெறும் மேடையை நோக்கி அண்ணாமலை சென்றார். அப்போது அவர் மேடையில் ஏறுவதற்கு முன்னே அங்கிருந்த ஒலிவாங்கி முன்பு இருந்த தனது புகைப்படத்தை கவனித்தார். அதனைக் கண்டு டென்ஷனான அண்ணாமலை, வேகமாக மேடை ஏறி தொண்டர்கள், நிர்வாகிகள் பார்த்துக்கொண்டிருக்க தனது புகைப்படத்தை ஆக்ரோஷமாக கிழித்து அருகில் இருந்த பாதுகாவலரிடம் கொடுத்தார். அண்ணாமலையின் இந்த செயல் அங்கு இருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் விழாவில் பேசிய அண்ணாமலை, “மகளிர் தின விழாவில் எனது புகைப்படம் வேண்டாம் என்பதால் அங்கிருந்து அப்புறப்படுத்தினேன்” எனத் தெரிவித்தார்.