
மழைக்காலம் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பருவமழை பெய்துவருகிறது. மழைக்காலங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற நச்சு உயிர்கள் பாதுகாப்பான இடம் தேடி வீடுகள், குடோன்கள் போன்ற கதகதப்பான பகுதிகளை தேடி வந்து அடைக்கலமாகும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை மற்றும் குளிர்காலங்களில் நச்சுக்கடியால் உயிரிழப்புகள் என்பது உலகம் முழுவதுமே அதிகரித்து வருகிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாகவே உள்ளன.
பாம்புக்கடி குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச பாம்புக்கடி விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடித்தால் உடனடியாக செய்யவேண்டிய முதலுதவி மற்றும் பாம்பு கடிக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆசியாவின் மிக பிரபலமானது வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இம்மருத்துவமனையின் நச்சுக்கள் கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் பாம்புக்கடி தடுப்பு மற்றும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 19ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சி.எம்.சி மருத்துவமனை இணை இயக்குநர் மருத்துவர் ஜாய் மாமென், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஐ.ராஜேஷ், கல்லூரி மருத்துவர் அணிலா சாக்கோ, செவிலியர் கல்லூரி டீன் வினிதா ரவீந்திரன், மருத்துவ செவிலியர் துறைத்தலைவர் சோப்யாவ விஜயானந்த் போன்றவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டவர்களுடன் வருடத்துக்கு ஒருமுறை சந்தித்து அவர்களின் அனுபவம் பகிர்ந்துகொள்ளச் செய்துள்ளனர். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாம்புக்கடி தடுப்பு விழிப்புணர்வு வீடியோ தயாரிப்பு போட்டிகள், வினாடிவினா போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி, மக்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என கிராமப்புறங்களைச் சேர்ந்த 700 தன்னார்வலர்களுக்கு பயிற்சி தந்துள்ளனர். 20,000 பொதுமக்களுக்கு நேரடியாக விழிப்புணர்வும் செய்துள்ளனர்.
நச்சு முறிவு மருத்துவம் பார்ப்பதற்கான செலவு அதிகமாக உள்ளது. பாம்பு போன்ற விஷக்கடிகளுக்கு ஆளாகுபவர்கள் ஏழை மக்கள் என்பதால் அவர்களால் அதிகளவு செலவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதற்கான மருத்துவ செலவை எப்படி குறைப்பது என ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. நச்சு முறிவு மருந்துகள் சுலபமாக, குறைந்த விலையில் கிடைப்பதற்கு என்ன வழி என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மூத்த மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
மக்களுக்கு அவசியமான இந்த விழிப்புணர்வு லட்சக்கணக்கான மக்களை சென்றடைய சி.எம்.சி இணையதளம் ஒன்றையும் வடிவமைத்து அதன்வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.