அமெரிக்கவாழ் தமிழரான பழனி பெரியசாமி தலைமையில் அமெரிக்க தமிழர்கள் 100 பேர் இணைந்து முதலீடு செய்து சென்னை கிண்டியில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோட்டலான லீ மெரிடியன் உருவாக்கப்பட்டது. முழுக்க முழுக்க தமிழர்களால் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பிரமாண்டமான ஸ்டார் ஹோட்டல் என்ற பெருமை அதற்குண்டு.
அமெரிக்க தமிழர்களின் முதலீடுகளுடன், இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. வங்கி, இந்திய டூரிஸம் ஃபினான்சியல் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கடனுதவியுடனும் தொடங்கப்பட்டது. இந்த ஹோட்டல் முதலில் சென்னையிலும், அடுத்து கோவையிலும் தொடங்கப்பட்டு, பின்னர், சென்னை விமான நிலையம் அருகே 26 ஏக்கர், பழனியில் 12 ஏக்கர், கோவையில் 6 ஏக்கர் நிலம் என்று பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கிக் குவித்தனர்.
இத்தகைய பெருமைவாய்ந்த லீ மெரிடியன் ஹோட்டல், தற்போது பெரும் நிதிச்சிக்கலில் சிக்கி, தமிழர்களின் கையைவிட்டுச் செல்லக்கூடிய நிலைக்கு வந்தது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் சிக்கி, அதன் தொழில் நசிவடைந்தது. நிறுவனத்தை நடத்துவதற்காக கடன் பெற வேண்டிய சூழல். இப்படி கடனாக வாங்கியதில் அதற்கான வட்டியும் சேர்ந்து 340 கோடி அவுட்ஸ்டாண்டிங் தொகையானது.
அடுத்து சொத்துக்களை விற்று உடனடியாக 99 கோடி ரூபாயைக் கட்டும்படி வங்கிகள் தரப்பில் நெருக்கடி தரப்பட்டது. நெருக்கடி காரணமாக, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 100 கோடி ரூபாய்க்கு காஸா கிராண்டேவுக்கு விற்க முடிவெடுக்கப்பட்டது. இதிலும் சிக்கல்கள்வர, வங்கிகளின் பிடி இறுகியது. தேசிய சட்டத் தீர்ப்பாயத்தில் 2019ம் ஆண்டு டூரிசம் ஃபினான்சியல் கார்ப்பரேசன் வழக்கு போட்டதால் திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, 3 நிறுவனங்கள் அப்பு ஹோட்டல் நிறுவனத்தை வாங்க முன்வந்த நிலையில், சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் சமர்ப்பித்த 423 கோடி ரூபாய் மதிப்புள்ள கையக்கப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளை ஒப்புதல் அளித்தது. அந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 1,600 கோடி ரூபாயாக இருக்கும் என்றுகூறி, 423 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுப்பது நியாயமில்லையென எதிர்ப்பு தெரிவித்தார் லீ மெரிடியனின் பழனி பெரியசாமி.
தங்களிடம் கடன் வழங்கியவர்களுக்கு பணத்தைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், அதற்கென 450 கோடி ரூபாய்வரை டெபாசிட் செய்வதற்கு 3 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார். இந்த வழக்கில் இருதரப்பு விவாதங்களையும் கேட்டுக்கொண்ட கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ரூபாய் 423 கோடிக்கு மதிப்பிடப்பட்ட லீ மெரிடியனின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்தது. அதோடு, இது தொடர்பாக தனது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தது. இதன்மூலம், லீ மெரிடியன் ஹோட்டலின் சொத்துக்கள், கடைசி நேரத்தில் விற்பனையிலிருந்து தப்பியுள்ளன.
- தெ.சு.கவுதமன்