புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக, மற்றும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அறந்தாங்கியில் கிரிக்கெட் போட்டியும், கீரமங்கலத்தில் மகளிருக்கான கபடிப் போட்டியும் நடத்த ஏற்பாடாகி போட்டிகளை தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி அறந்தாங்கி கூத்தாடிவயலில் நடந்த கிரிக்கெட் இறுதிப் போட்டிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வருவதாக ஓய்விற்காக ஒரு விடுதியில் தங்கியவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஓய்வு தேவை என கூறியதால் கீரமங்கலத்தில் நடக்கும் மகளிர் கபடி போட்டிக்கு செல்ல முடியாமல் மாலையில் மதுரை வழியாக சென்னை திரும்பினார். இந்நிலையில் கீரமங்கலம் மகளிர் கபடிப் போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ''6 கோடுகளை மட்டும் போட்டு விளையாடும் கபடி, ஒரு மூங்கில் குச்சியுடன் விளையாடும் சிலம்பம் போன்ற தமிழர்களின் விளையாட்டுகள் இன்று உலக அளவில் போய்விட்டது. சிலம்ப வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கியது இப்போதைய முதலமைச்சர் தான். அதேபோல கபடி வீரர்களுக்கு பாதுகாப்பிற்காக காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரிடமும், விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்திருக்கிறேன். விரைவில் முதலமைச்சர் நல்ல செய்தியை சொல்வார். இதுவரை கட்டாந்தரையில் கபடி விளையாடிய வீரர்களுக்காக பாதிப்புகளை குறைக்க மேட் வழங்கி இருக்கிறோம்'' என்றார்.