அரசு துறைகளில் பணமும் லஞ்சமும் அதிகம் புரள கூடிய ஓரு அலுவலகம் என்றால் அது வட்டார போக்குவரத்து அலுவலகம் தான். இங்கு திரும்பிய பக்கமெல்லாம் புரோக்கா்களும் லஞ்சமும் தான் தலை விரித்தாடும். இதில் குமரி மாவட்டத்தில் உள்ள இரண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் அடிக்கடி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து கணக்கில் வராத லட்சகணக்கான பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
இந்த நிலையில் கோழிபோர் விளையில் செயல்படும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கா்கள் ஆதிக்கமும் முறைகேடும் நடப்பதாக நாகா்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மதியழகன் தலைமையில் கொண்ட டீம் அலுவலகத்தில் 4 பக்கங்களிலும் அதிரடியாக புகுந்தது.
இதை பார்த்த அங்குமிங்கும் நின்ற 10 க்கு மேற்பட்ட புரோக்கா்கள் ஓட்டம் புடித்தனா். இதில் போலீசார் சத்யராஜ், ரமேஷ் இருவரையும் பிடித்தனா். இதில் சத்யராஜிடமிருந்து 43 ஆயிரமும் ரமேஷிடமிருந்து 17 ஆயிரமும் கைபற்றினார்கள். மேலும் போக்குவரத்து ஆய்வாளா் சத்யகுமாரின் அறையில் இருந்து கணக்கில் வராத 27 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றினார்கள். பின்னா் அலுவலகத்தில் நடு இரவு வரை சோதனை செய்து முறைகேடு ஆவணங்களையும் எடுத்து சென்றனா்.