Skip to main content

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது... சிபிஎம் எம்பிக்கு கோபத்தை ஏற்படுத்திய கல்வெட்டு...!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.டி.ரங்கராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 43 லட்சத்தில் இரண்டு மாடிகளில் ஆய்வுக்கூட கட்டிடம் கட்டப்பட்டது.  இந்த கட்டிடத்தை மார்ச் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டி.கே.ரங்கராஜன் திறந்து வைப்பதற்காக பள்ளியின் சார்பில் திறப்பு விழா நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி  தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், உள்ளிட்ட  கட்சியினருடன் கட்டிடத்தின் வாயிலில் ரிப்பனை வெட்டி உள்ளே சென்று பார்த்த எம்பி உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

 

Inscription that angered CPM MP ...!

 



அது என்னவென்றால்,  இந்த கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  ஜனவரி மாதம் 6 ஆம் தேதி திறந்து வைத்ததாக மாநில அரசு சார்பில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு பள்ளியின் சுவற்றில் வைக்கப்பட்டிருந்தது.  இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் டி.கே.ரங்கராஜன் கேட்டதற்கு, அதிகாரிகள் ஏற்கனவே வந்து கல்வெட்டை பதித்து விட்டு சென்று விட்டார்கள் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து பேசிய கே.டி.ரங்கராஜன் “அனைவருக்கும் கல்வி, வேலை என்ற முழக்கத்தை முன்வைத்துத்தான் தொகுதி நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் திருவந்திபுரம் அரசுப் பள்ளிக்கு ரூ. 43 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த கட்டிடத்தையும், பொருட்களையும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த நிதி என்னுடைய சொந்த நிதி கிடையாது, உங்களுடைய வரிப்பணம். இந்த கட்டடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதி கமிஷனாக கரைந்துள்ளது. இப்படி சொல்வதால் கடலூர் மாவட்ட ஆட்சியர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை” என்றார். மேலும் கல்வித்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த செயலை எம்பி உள்ளிட்ட அனைவரும் கட்டிட திறப்பு விழாவில் கண்டித்தனர்.  மாவட்ட ஆட்சியருக்கு நிகழ்ச்சியில் கண்டனம் தெரிவித்து, அவருக்கு கடிதம் எழுதுவதாக டி.கே. ரங்கராஜன் பேசினார். 

 



அரசின் இந்த செயல்பாடுகள் அங்கிருந்த பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மாணவர்களுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தியது.  மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் கல்வி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் கட்டப்பட்ட கட்டிடத்தை நிதி ஒதுக்கீடு செய்த சம்பந்தப்பட்ட மாநிலங்களை உறுப்பினருக்கு தெரிவிக்காமல் திறந்து வைத்தது சரியான நடைமுறையில்லை என்பது ஒருபுறம் என்றாலும், தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டில் முதலமைச்சர் பெயர் மட்டுமே உள்ளது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? எந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது? யார் நிதி ஒதுக்கியது? என்ற எந்த விவரமும் அதில் இல்லை.  

இதைப் பார்த்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் திரைப்படம் ஒன்றில் இனிசியலுக்காக இவர் இருக்கிறார் என்று வரும் காமெடிபோல் இந்நிகழ்வு இருக்கிறது என்று சிரித்த படியே சென்றனர். 

 

சார்ந்த செய்திகள்