
கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஊழல் வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ ஒத்திவைத்தார்.
கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்காக சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் லஞ்சம் வாங்கும் போது இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை ஊழல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 -ம் தேதி மனு தாக்கல் செய்து இருந்தனர். 9 ம் தேதி விசாரணைக்கு வந்த கஸ்டடி மனு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனு மீதான விசாரணைக்காக துணைவேந்தர் கணபதி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட துணைவேந்தர் கணபதியிடம், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு இருக்கின்றனர், போலீஸ் காவலுக்கு செல்கின்றீ்களா என நிதிபதி ஜான்மினோ கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த துணை வேந்தர் கணபதி , போலீஸ் விசாரணைக்கு செல்ல விருப்பமில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீஸ் காவல்கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. அப்போது லஞ்சமாக வாங்கப்பட்ட காசோலைகளை துணைவேந்தர் எங்கு வைத்துள்ளார் என்பது குறித்து விசாரிக்க வேண்டி இருக்கின்றது எனவும் , எனவே துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழகறிஞர் சிவக்குமார் தெரிவித்தார்.
அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட் முறையாக இல்லை எனவும், எதற்காக நீதிமன்ற காவல் என்பதை தெளிவாக அபிடவிட்டில் தெரிவிக்கப்படவில்லை எனவும், ஒரு நிமிடம் கூட போலீஸ் காவல் கொடுக்க முகாந்திரம் இல்லை எனவும் நீதிமன்ற காவல் கொடுக்க கூடாது என துணைவேந்தர் கணபதி தரப்பு வழகறிஞர் ஞானபாரதி தெரிவித்தார். இரு தரப்பு வாதத்தினை கேட்ட நீதிபதி ஜான்மினோ வழக்கு விசாரணையை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்தார்.