அத்துமீறிய இன்ஸ்பெக்டர் மீது 10-பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகிலுள்ள தேள்கரடு வீதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது-42). அதே பகுதியை சேர்ந்தவர் பானுமதி (வயது-42). இவர்களிடையே வீடு வாங்கியது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பானுமதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மல்லிகாவை காவல் நிலையத்துக்கு அழைத்து, மல்லிகாவின் வீட்டில் தான் கூறும் பெண்ணை குடியமர்த்துமாறு அவரை மிரட்டியுள்ளார்.
“நீங்கள் சொல்கிறபடி செய்யமுடியாது, இந்த வீடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. முடிவு வரும்வரை யாரையும் குடிவைக்க முடியாது...” என்று மல்லிகா மறுப்பு கூறியுள்ளார்.
ஆனால், காவல் ஆய்வாளர் சிவகுமார் தன்னுடன் காவலர்களை கூட்டிக்கொண்டு சென்று, மல்லிகா வீட்டின் கேட்டை உடைத்து, சரஸ்வதி என்ற பெண்ணின் குடும்பத்தினரை அந்த வீட்டில் குடி வைத்துள்ளார். இந்தக் காட்சிகள் மல்லிகாவின் வீட்டில் இருந்த 'சிசிடிவி' கேமிராவில் பதிவானது.
இதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சிவக்குமார் மீது, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மல்லிகா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி குமாரசிவம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீஸ்காரர் அரங்கசாமி ஆகியோரை குற்றவாளிகளாக சேர்க்க உத்தரவிட்டார்.
இருவர் மீதும், வீட்டில் அத்துமீறி நுழைந்தது, மிரட்டல் விடுத்தது, நீதிமன்றத்தை அவமதித்தது உள்ளிட்ட, 10-பிரிவுகளில் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
- பெ.சிவசுப்பிரமணியம்