மீட்கப்பட்ட குழந்தை மற்றும் காப்பாற்றிய பெண்
சிவகங்கை மாவட்டத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று படுகாயத்துடன் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்வெளியாகியுள்ளது.
கடந்த 22 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, சுக்காம்பட்டி பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கழுத்து மற்றும் கைகள் அறுக்கப்பட்ட நிலையில் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் சாலை பகுதியில் வீசி செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அந்த வழியாகச் சென்று மரியம் பீவி என்ற பெண் மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை சாலையில் வீசியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து குழந்தையை மீட்ட மரியம் பீவி தெரிவிக்கையில், ''குழந்தை கீழே கிடப்பதாக கத்தினார்கள். நான் சென்று பார்த்தபோது சந்து இடுக்கில் மண்ணுக்குள்ளே குழந்தை கிடந்தது. பார்த்தவுடனே தூக்கிக்கிட்டு ஹாஸ்பிடல் வந்து விட்டேன். குழந்தை உயிர் பிழைத்தால் போதும் சார். குழந்தையை பார்த்த உடனே காப்பாற்ற வேண்டும் என்று தான் தோணுச்சு மற்றவர்கள் போல கத்திக் கொண்டிருக்க மனம் நினைக்கவில்லை.குழந்தையை என்னிடம் கொடுக்காவிட்டாலும் சரி எப்படியாவது காப்பாற்றினால் போதும்'' என வேதனையோடு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சிறுமி மற்றும் கொத்தனார்
தொடர்ந்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 18 வயது சிறுமி ஒருவர் கொத்தனாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இது வெளியே தெரியாமல் மறைப்பதற்காக சிறுமி தனக்கு பிறந்த குழந்தையை கொல்ல முயற்சித்தது சாலையில் வீசியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிங்கம்புணரி போலீசார் சம்பந்தப்பட்ட கொத்தனாரை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர். குழந்தையைக் கொலை செய்ய முயன்ற சிறுமியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.