ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிருந்து மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அதில் சீர்மரபினர் நல சங்கத்தின் மாநிலத்தலைவர் முனுசாமி தலைமையில் பழங்குடியினர் உடையணிந்து மனு கொடுக்க வந்தனர் சிலர். பிறகு அவர்கள் கலெக்டரை சந்தித்து மனுவை கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது "நாங்கள் 68 சமுதாயத்தை உள்ளடக்கி உள்ளோம். ஈரோடு மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கில் வசிக்கிறோம். எங்கள் சமுதாய மக்களுக்கு சீர்மரபினர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு நீண்ட நாள்களாக அலைந்து வருகிறோம் .ஆனால் அதிகாரிகள் முறையாக பதில் கொடுப்பதில்லை. எங்களுக்கு நாங்க கேட்ட ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் அரசின் பல்வேறு சலுகைகளை இழந்து வருகிறோம்.
மேலும் 2015 ஆம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைப்படி ஓபிசி இட ஒதுக்கீட்டில் உட்பிரிவு செய்து எங்கள் சமுதாய மக்களுக்கு 9 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க உறுதி அளித்தது அதை நிறைவேற்றும் பொருட்டு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் எந்தவித காரணமும் இன்றி அந்த ஆணையத்தின் கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் அரசும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என தெரிவித்தனர்.