சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 7 ஆண்டு கால மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசாங்கமாகத்தான் இருக்கிறது. சாதாரண மக்களுக்கான அரசாங்கமாக இல்லை. உலக பட்டினி குறியீட்டில் உள்ள 116 நாடுகளில் ஏற்கனவே 94வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 101 வது இடத்திற்குச் சரிந்திருக்கிறது. உணவு பாதுகாப்பில் அபாய கட்டத்தில் இந்திய மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதுதான் 7 ஆண்டு கால மோடி ஆட்சிக்கான சாட்சி.
கௌதம் அதானி, மோடி அரசுக்கு முன்பு வரை பணக்காரர்கள் பட்டியலில் இல்லை. ஆனால் இன்றைக்கு ஆசியாவிலேயே 2-வது இடத்தில் அவர் இருக்கிறார். அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்காகத்தான் இந்த அரசு இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வங்கிகளின் வாராக்கடன் பட்டியலை ஒருங்கிணைத்து கடனுக்கான ஒரு வங்கியைத் திறந்து, வாராக் கடன்களை அதற்கு மாற்ற முயற்சி நடந்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து மக்களுக்குக் கண்ணீரை வரவழைக்கிறது.
இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் காரை ஏற்றி கொலை செய்யப்படுகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகுதான் மத்திய இணை அமைச்சரின் மகன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை மத்திய இணை அமைச்சர் பதவி விலகவில்லை. பாமர மக்களுக்கான பாதக கொள்கைகளைத்தான் பாஜக அரசு எடுத்து வருகிறது.
மாநில உரிமைகள் பறிப்பு விஷயத்திலும் அதுபோலத்தான் உள்ளது. தமிழக அரசு மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருவது பாராட்டத்தக்கது. பொதுச் சொத்துக்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடுகிறார்கள். எந்தவித முதலீடும் இல்லாமல் நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாடுகின்றனர். தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது. அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் காந்தி ஜெயந்தி விடுமுறை, மே தின விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டம் குறித்து எந்தக் கிராமத்திற்குச் சென்று மக்களுடன் சீமான் கலந்துரையாடினார். அது போன்ற பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் கலந்துரையாடிவிட்டு அவர் இந்த 100 நாள் வேலையைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். விருத்தாசலத்தில் சாதி ஆணவக் கொலையில் முதல் முறையாக காவல்துறையினரும் தண்டிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது” என்று பேசினார்.
இவருடன் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, ராமச்சந்திரன், தேன்மொழி, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.