Skip to main content

சமூகப் பயன்பாட்டிற்கு விண்வெளி ஆய்வை பயன்படுத்தும் நாடு இந்தியா: இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால்

Published on 05/12/2017 | Edited on 05/12/2017

சமூகப் பயன்பாட்டிற்கு விண்வெளி ஆய்வை 
பயன்படுத்தும் நாடு இந்தியா:
 இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் பெருமிதம்

விண்வெளி ஆய்வை சமூக பொருளாதாரப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தும் நாடு இந்தியா எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார் இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.இங்கர்சால். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற இரண்டாவது புத்தகத் திருவிழாவின் நிறைவுநாளான ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் பேசியது:



உலக அளவில் விண்வெளிய ஆய்வுகளில் சாதனை படைத்துவரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது நமக்குப் பெருமை. நெதர்லாந்திலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த சிறியவகை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த பல நாடுகள் மறுத்தது. இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியது. தற்பொழுது அவர்கள் மிகப்பெரிய அளவில் மைக்ரோசாப்ட் தொழில் வல்லுனர்களாக வளர்ந்துள்ளனர். 

விண்வெளி ஆய்வு வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துகின்றன. நம்முடைய ஆய்வை சமூக பொருளாதார வளர்ச்சிக்காப் பயன்படுத்துகிறோம். இத்தகைய ஆய்வுதான் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். செவ்வாய்க்கு பயணம் செய்ய 63 கோடி கிலோமீட்டரைக் கடக்க வேண்டும். பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு செவ்வாயின் ஈர்ப்பு விசைக்கு மாற வேண்டும். ராக்கெட்டை அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவது மிகவும் துல்லியமான ஆபரேசன். இதில் 50 சதவிகிதம் வெற்றியும் 50 சதவிகிதம் தோல்வியும் இருக்கும். இதை எங்கள் குழுவின் தலைவர் ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். வெற்றிபெற்றால் அது உங்களுக்கு. தோல்வி என்றால் நான் பொறுப்பு என ஊக்கப்படுத்தினார். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. வெற்றிபெற்றுவிட்டோம். அறிவியலுக்கு எல்லை கிடையாது. உலகம் எல்லோருக்குமான சொத்து. விண்ணிலிருந்து பார்த்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு எல்லைக்கோடு எதுவும் தெரியாது.

சிறிய வயதிலேயே புத்தகங்களை எனது தந்தை அறிமுகம் செய்தார். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகநேரம் செலவிடுவதைத் தவிர்த்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் படிப்பதற்கு நேரமில்லை என்பது வெட்கக்கேடான செயல். பில்கேட்ஸ் வருடத்திற்கு 50 புத்தகங்கள் படிக்கிறார். எனது, அலமாரியில் எப்பொழுதும் 150 புத்தகங்களுக்குக் குறையாமல் இருக்கும். இங்கு நான் வாங்கிய புத்தகங்கள் எனது அடுத்த ஆறுமாத தேவையை பூர்த்தி செய்யும். அடுத்த ஆண்டு நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பார்வையாளராகப் பங்கேற்க விரும்புகிறேன்.

ராமநாதபுரத்திலிருந்து இங்கு மேடையேறிய மாணவர்கள் மிகவும் அற்புதமான சாகசங்களை நிகழ்த்தினர். அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் எனும்போது மிகவம் நெகழ்ந்துபோனேன். இதுதான் அழகு. அவர்களை இஸ்ரோவுக்கு அழைத்துச்சென்று கவுரப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

நிறைவு விழாவிற்கு உலகத் திருக்குறள் பேரவையின் மாவட்டத் தலைவர் சண்முக பழனியப்பன் தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குநர் பொ.பொன்னையா, அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் அ.அமலராஜன், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் என்.செல்லத்துரை, கல்வியாளர் சி.சதீஷ்குமார் ஆகியோர் பேசினர். முன்னதாக  கே.சதாசிவம் வரவேற்க, சி.எஸ்.வள்ளல் நன்றி கூறினார்.

புதிய வெளியீடுகள்

விழாவில் புத்தகத் திருவிழா குறித்த சிறப்பிதழை மேன்மை மாத இதழ் வெளியிட்டது. முதல் பிரதியை இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் வெளியிட சண்முக பழனியப்பன் பெற்றுக்கொண்டார்.  சி.சதீஷ்குமார் எழுதிய ‘தமிழன் என்ற கர்வம் எனக்கு உண்டு’ என்ற கவிதை நூலை விஞ்ஞானி இங்கர்சால் வெளியிட கவிஞர் நா.முத்துநிலவன் பெற்றுக்கொண்டார். ‘இந்தப் புத்தகம்’ என்ற தன்னம்பிக்கை நூலை சண்முக பழனியப்பன் வெளியிட  அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குநர் பொ.பொன்னையா பெற்றுக்கொண்டார்.

- பகத்சிங்

சார்ந்த செய்திகள்