
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மக்கள் இயல் துறை மற்றும் இந்திய மக்கள் தொகை ஆய்வு சங்கம் இணைந்து, தென்னிந்திய மக்கள் தொகை வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் மாநாட்டு மலரை வெளியிட்டு மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், தாவரங்களின் நடத்தைக்கும் மனிதனின் நடத்தைக்கும் இடையில் உள்ள ஒப்பீடுகளைக் கூறினார். மேலும் சிறந்த பொருளாதாரத்தை தேடி மக்கள் இடம் பெயர்வது அதிகரிக்கிறது என்றார்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சஜ்ஜன்சிங் சவான், ஐ.ஏ.எஸ், உணவு மற்றும் நீர் வரையறுக்கப்பட்ட வளங்களில் உள்ள சவால்கள், தொழிற்சாலைகள், கார்ப்பரேஷன் போன்றவற்றால் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது எனப் பேசினார்.
மக்களியல் துறைத்தலைவர் மற்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர், அனைவரையும் வரவேற்றார். இதைத் தொடர்ந்து இந்திய மக்களியல் துறை கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் சர்மா தலைமை உரையாற்றினார். கூட்டமைப்பின் தெற்குப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அனில்சந்திரன், பொதுச் செயலாளரான உஷா ராம் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆய்வு மாதிரி குறு தரவு குறித்த ஆராய்ச்சிக்கான பணிக்கூடத்தை அமைப்பதற்கு தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் நடத்திய விவாதப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று பிரிவுக்கான ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மக்கள் தொகை ஆராய்ச்சி மையங்களில் ஆராய்ச்சியாளர்கள் சமூக விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர். பல்வேறு மக்கள் தொகை தலைப்புகளை உள்ளடக்கிய 54 ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 26 சுவரொட்டி விளக்கக் காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதில் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்விக்கான மைய இயக்குநர், புலமுதல்வர்கள், துறைத் தலைவர்கள், இயக்குநர்கள், இணை, துணை இயக்குநர்கள், ஆசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.