தமிழ்நாட்டில் தொடர்ந்து கரோனா தடுப்பூசியானது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவரும் நிலையில், கணிசமான எண்ணிக்கையிலேயே தடுப்பூசிகள் வருவதால் பொதுமக்கள் பெரும் கவலையில் இருந்துவருகின்றனர்.
கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தற்சமயம் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றினாலும் கரோனாவிலிருந்து முழுமையாக பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியையே மக்கள் நம்பியிருக்கின்றனர். அதேவேளையில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தபோது பொதுமக்கள் அதிகளவில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் சந்தேகமும் இருந்தது. ஆனால் தற்போது, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு பொது மக்களிடையே அதிகரித்துள்ளது.
ஆனால் மாவட்டங்களுக்கு வழங்கக்கூடிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை மிகவும் கணிசமாகவே இருப்பதால் தினமும் தடுப்பூசி போடும் முகாம்களைத் தேடிவரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (01.07.2021) திருச்சி மாநகரப் பகுதியில் நான்கு கோட்டங்களில் எட்டு முகாம்கள் அமைக்கப்பட்டு 3,200 தடுப்பூசிகள் போடப்படுகிறது.
அதேபோல் திருச்சி மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, முகாம் அமைத்து 5,800 தடுப்பூசிகள் போடப்பட்டுவருகிறது. அதன்படி 9 ஆயிரம் டோஸ்கள் மட்டுமே இன்று செலுத்தப்பட உள்ள நிலையில், வந்திருக்கக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கையோ 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.