விழுப்புரம் மாவட்டம் பிடாகம் அருகே உள்ளது நத்தமேடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயி கோதண்டபாணி. இவர் வயலில் மணிலா சாகுபடி செய்துள்ளார். அறுவடை நேரம் என்பதால் தற்போது இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் மணிலா பயிரை சேதப்படுத்தி வருவதால் கோதண்டபாணி இரவு நேரத்தில் வயலுக்குச் சென்று காவல் இருந்து காட்டுப் பன்றிகளைத் துரத்தி வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வயலுக்குச் சென்று காவலுக்கு இருந்துள்ளார். மறுநாள் காலை வழக்கம் போல வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோதண்டபாணி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு 7 லட்சம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஜா, சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் அருள். இவரும் இவரது அண்ணன் ராஜேஷ் ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் அருள் தன் மகன் பிறந்த நாளையொட்டி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திருவரங்கம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்று அன்று இரவு அங்கேயே தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அருளின் அண்ணன் மனைவி தனது அறையில் இருந்து வெளியே வந்தபோது அருளின் அறை திறந்து கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அருளுக்குத் தகவல் தெரிவித்தனர். அருள் வந்து பார்த்தபோது அவரது வீட்டு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து தங்க வளையல், நெக்லஸ் மற்றும் வெள்ளி பொருட்கள் உட்பட 33 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் 12 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் அருள் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று ஆலத்தூர் காட்டுக்கொட்டாய் பிரிவைச் சேர்ந்த தன சேகர் என்பவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பணி செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகள் தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனசேகர் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலை வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அவர்கள் வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை 60 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் 5 லட்சம் பணம் மொத்தம் 17 லட்சம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசில் தனசேகர் மகன் அருள் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகிறார்கள். இப்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் தினசரி இரண்டு மூன்று வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசார் திணறி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் இரவில் தூக்கம் இன்றி தவித்து வருகிறார்கள். தனித்துக் குடியிருக்கும் வீடுகளிலும், ஆட்கள் குடியிருக்கும் வீடுகளிலும் துணிந்து கொள்ளை நடப்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.